தாயுமானவர் திட்டம்.. சென்னையில் 18 மண்டலங்களில் 2 நாட்களுக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்..
சென்னை மாநகரில் உள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 18 மண்டலங்களில் இந்த திட்டம் என்பது செயல்படுத்தப்படுகிறது.
ஜூன் 2, 2026: சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் இன்றும் நாளையும் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த “தாயுமானவர்” திட்டம், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போதைய ஆட்சியிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாயுமானவர் திட்டம் – இன்றும் நாளையும்:
ஜூன் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களில், சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட உள்ளது. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை பெற முடியாதவர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மண்டலங்களில் பொருட்கள் விநியோகம்:
சென்னை மாநகரில் உள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 18 மண்டலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை.. மாநில தகவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
இந்த பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உள்ளனர். அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும்.
பொதுவாக குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வருவது வழக்கம். ஆனால் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு அல்லது நடக்க முடியாத சூழல் காரணமாக பலர் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. “தாயுமானவர்” திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.