“எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்”.. ஓபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு..
O.Pannerselvam statement: அதிமுக இணைப்பு குறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியும், அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? ஏதேனும் சங்கரமடத்தில் சென்று சேர்ந்துவிடவா? உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வேன்? என்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேனி, பிப்ரவரி 24: ஜெயலலிதா இறந்தபிறகு தன்னை கட்டாயப்படுத்தி முதல்வராக்கியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி என 62 வகையான உதவிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தவர்.
இதையும் படிக்க: ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!
கட்டாயத்தில் 3வது முறையாக முதல்வரானேன்:
அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறி வந்தேன். கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தார் ஜெயலலிதா. 2 முறை அவரின் கட்டளையை ஏற்று நான் முதல்வரானேன். ஜெயலலிதா எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நற்சான்று கொடுத்தார். ஜெயலலிதா மறைந்தபிறகு என்னை காட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள். அவர் மறைந்தபிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பம் இல்லை என்று கூறினேன். எனினும் கட்டாயத்தின்பேரில் 3வது முறையாக நான் முதல்வரானேன்.
தனிக்கட்சி தொடங்கமாட்டேன்:
நான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தைத் தொடங்கினேன். அரசியல் பிரபலம் ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன்” என்று கூறினார்.
சங்கரமடத்தில் சென்று சேர்ந்துவிடவா?:
மேலும் பேசிய அவர், நடைபெற்ற 11 தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போதும் அதேநிலைமை தான் நீடித்து வருகிறது என்று கூறினார். அதோடு, அமித்ஷாவை சந்தித்து பிரிந்த அதிமுகவை இணைத்து வைக்குமாறு கேட்டுகொண்டதாகவும், அவரும் உறுதியாக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அழைப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
ஆனால், அவர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? ஏதேனும் சங்கரமடத்தில் சென்று சேர்ந்துவிடவா? உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.