மகளிர் உரிமை தொகையால் இப்படியொரு விபரீதமா.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்!
Virudhunagar Crime: விருதுநகர் மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் மகளிர் உரிமைத் தொகையை செலவு செய்ததால் தம்பதியே இடையே ஏற்பட்ட தகராறில் மன வறுத்தத்தில் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( 32 வயது). இவரது மனைவி ராமு ( 28 வயது). ஈஸ்வரன் கூலி தொழில் செய்து வருகிறார். ராமு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களது குடும்பம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், தமிழக அரசு சார்பில் ராமுவுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு நிதி ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த ராமுவின் கணவர் ஈஸ்வரன், தனது மனைவிக்கு தெரியாமல் அந்த பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த ராமு தனது கணவரிடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது, பணத்தை செலவு செய்து விட்டதாகவும், இதுகுறித்து பேச வேண்டாம் எனவும் ஈஸ்வரன் கூறியதாக தெரிகிறது.
கணவன்-மனைவி இடையே தகராறு
அப்போது, குடும்ப செலவுகளை பார்ப்பதற்காக அந்த 5 ஆயிரம் ரூபாயை நான் வைத்திருந்ததாகவும், அதை இப்படி தேவையின்றி செலவு செய்து விட்டீர்களே என்று ஈஸ்வரனிடம், ராமு கண்டிப்புடன் பேசியுள்ளார். இதில், கணவன், மனைவி இருவர் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ராமுவை அவரது கணவர் ஈஸ்வரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மனம் உடைந்த ராமு தனது கணவர் ஈஸ்வரனிடம் கோபித்துக் கொண்டு பக்கத்து ஊரில் உள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டார்.
மேலும் படிக்க: கொலை வழக்கு.. 21 பேருக்கு முதலில் விடுதலை.. பின்னர் ஆயுள் தண்டனை.. 13 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி
உடனே, ஈஸ்வரன் தனது மாமியார் வீட்டுக்கு நேரில் சென்று மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் குடும்பம் நடத்த வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஈஸ்வரன் மனம் உடைந்து வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மனைவி தன்னிடம் கோபித்துக் கொண்டு சென்ற மன வருத்தத்தில் இருந்த ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டின் உள்ளே சென்று அவரை தூக்கில் இருந்து மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கூமாப்பட்டி போலீசார் விசாரணை
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஈஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக, கூமாப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மனைவிக்கு தெரியாமல் செலவு செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தடுக்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: திமுகவின் கடைசி பட்ஜெட்டிலும் மக்களை ஏம்மாற்றியுள்ளது – அண்ணாமலை கடும் விமர்சனம்..



