சென்னை, பிப்ரவரி 18, 2026: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2026–2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட்டிலும் அதையே தொடர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!
பல பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கவில்லை:
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை…
— K.Annamalai (@annamalai_k) February 17, 2026
தூய்மைப் பணியாளர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு, மாணவர் விடுதிகளின் நிலைமை, போதைப்பொருள் பிரச்சினை போன்றவற்றை பட்ஜெட்டில் சரியாக எடுத்துரைக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், மாநிலத்தின் மொத்த கடன் தொகை 2027 மார்ச் 31ஆம் தேதியளவில் 10,62,248 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இத்தனை கடன் எதற்காக வாங்கப்பட்டது? அந்த நிதி எங்கே சென்றது? என கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?
மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது:
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டம் தொடர்பாக மாநில அரசு திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், மத்திய அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
இதேபோல், கடந்த ஆண்டுகளில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சுத்தம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விளக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட் இது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.