தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இது மிகவும் குறுகிய கால கூட்டத்தொடராக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி, அவற்றிடமிருந்து பதில்களைப் பெற்றுத் தருவதில் காலத்தாமதம் ஏற்படும். எனவே, இந்த மூன்று நாள் கூட்டத்தொடரில் வினா-விடை நேரம் (கேள்வி-பதில் நேரம்) இருக்காது என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை, ஜுன் 18: தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது மற்றும் பேரவையின் அலுவல்கள் குறித்து முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கால விவரங்கள் குறித்து விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: “வாயத் திறங்க CM”.. கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. முதல்வருக்கு எதிராக கோஷம்!!
கூட்டத்தொடர் கால அட்டவணை:
ஜூன் 19, 2026 (வெள்ளிக்கிழமை) பேரவை வழக்கம் போல் கூடும். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஜூன் 20, 21 (சனி மற்றும் ஞாயிறு)சட்டப்பேரவைக்கு விடுமுறை நாட்களாகும்.
ஜூன் 22, 2026 (திங்கட்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும்.
ஜூன் 23, 2026 (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று, அன்றைய தினமே முதலமைச்சரின் பதிலுரையுடன் கூட்டத்தொடர் நிறைவடையும்.
தொடக்க நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பேரவை வழக்கம் போல் காலை 9.30 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
முக்கிய இரங்கல் தீர்மானங்கள்:
ஜூன் 19 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த முக்கிய ஆளுமைகளுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் சீகூர் ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
வினா-விடை நேரம் ரத்து:
இது மிகவும் குறுகிய கால கூட்டத்தொடராக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி, அவற்றிடமிருந்து பதில்களைப் பெற்றுத் தருவதில் காலத்தாமதம் ஏற்படும். எனவே, இந்த மூன்று நாள் கூட்டத்தொடரில் வினா-விடை நேரம் (கேள்வி-பதில் நேரம்) இருக்காது என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆளுநர் உரையின் மீதான திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், நாளை மதியம் 3 மணிக்குள்ளாக அதனை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேசிய கீதம் சர்ச்சை குறித்து விளக்கம்:
இன்றைய கூட்டத்தில் மரபு முறைப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக சுமூகமான மற்றும் அமைதியான முறையில் சபை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தந்த ஆளுநருக்கு நன்றி. இந்த நடைமுறை (இரண்டு முறை தேசிய கீதம் இசைப்பது) வருங்காலத்திலும் தொடர்வது நலமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!
கட்சிப் பதவிகள் மற்றும் விளக்கக் கடிதம்:
அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடா நியமனம் குறித்த இறுதி அறிவிப்பு நாளை காலை சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சபாநாயகர் தெரிவித்தார். அதேபோல், ராஜினாமா விவகாரத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு அவர்கள் பதில் அளித்துள்ளதாகவும், அது தற்போது ஆய்வில் உள்ளதால் விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.