காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?
Valentines Day Roses : காதலர் தினத்தயொட்டி, ஒசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா பூக்கள் ஒரு தண்டு ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வருவதால் ரோஜா பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

காதலர் தின ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி அதன் சாதகமான குளிர்கால நிலைக்கு பெயர் பெற்றதாகும். இந்த பகுதியானது தமிழகத்தின் முக்கிய ரோஜா உற்பத்தி மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு, ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம் மற்றும் தளி ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜாக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு, பயிரிடப்படும் ரோஜாக்களின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் பேரிகை பகுதியில் இருந்து ரோஜாக்கள் அறுவடை செய்யப்படுகிறது. நிகழாண்டு கடுமையான உறை பனி, குளிர் காலம் தொடர்பான நோய்கள் மற்றும் காலநிலை மாற்றத் தாக்கங்கள் காரணமாக ஒட்டுமொத்த உற்பத்தி சுமார் 80 லட்சம் பூக்களாக குறைந்துள்ளது. இதில், பிப்ரவரி 10- ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 20 லட்சம் பூக்கள் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், பிரான்ஸ், லெபனான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஒரு தண்டு ரோஜா பூ ரூ.55 வரை விற்பனை
தற்போது, உற்பத்தி குறைவாக இருந்த போதிலும், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளில் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றுமதி தரமான ரோஜாக்கள் ஒரு தண்டுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சில்லறை சந்தைகளில் தனிப்பட்ட பூக்கள் ரூ.25 முதல் ரூ.35 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மொத்த சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ.650 முதல் ரூ.700 வரை விற்பனை ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் காதலர் தினம்…காத்திருக்கும் காதலர்கள்…சூடுபிடிக்க தொடங்கியது ஓசூர் ரோஜா பூக்கள் விற்பனை!
அடுத்தடுத்து நிகழ்வுகளால் ரோஜா பூக்கள் தேவை அதிகரிப்பு
காதலர் தினம் மற்றும் திருமண விசேஷ நிகழ்ச்சிகள், மகா சிவராத்திரி என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வருவதால் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் உள்ளூர் ரோஜா பூக்கள் விற்பனைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். இதனால், ஓசூர் பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பொதுவாக பசுமை இல்லம் மற்றும் திறந்தவெளி சாகுபடியில் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
25-க்கும் மேற்பட்ட ரோஜா பூக்கள் சாகுபடி
இதில், தாஜ்மஹால், ரோட்ஸ், நோப்லெஸ், கோல்டு ஸ்ட்ரைக், சவரன், அவலாஞ்ச், பெர்னியர், கொர்வெட் மற்றும் டிராபிகல் அமேசான் உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் இந்த பகுதியில் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில், சிவப்பு தாஜ்மஹால் வகை ரோஜா பூக்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதற்கான தேவை அதிகரித்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பூக்கள் வளர்ப்பு துறையில் சார்ந்துள்ளனர்.
மேலும் படிக்க: காதலர் தினம்…22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி..ஆன்லைனில் ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்!