ஒன்றல்ல..இரண்டல்ல.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. விழுப்புரம் தலைமையாசிரியரின் வக்கிர செயல்!
Villupuram Headmaster Arrested : விழுப்புரம் மாவட்டத்தில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த புகாரில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், திரு விக்ரமன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பள்ளியில் பயிலும் 8 முதல் 10 வயதுக்கு உள்பட்ட 9 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் திரு விக்ரமன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் இது தொடர்பாக தங்களது பெற்றோர்களிடமும், பிற ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளனர்.
9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த தலைமையாசிரியர்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தொடக்கக்கல்வி அதிகாரி இளமதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் திரு விக்ரமனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அத்துடன், பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகளையும் தனித் தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தி இருந்தார். இதில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் திரு விக்ரமன் பாலியல் தொல்லை அளித்தது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் படிக்க: தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!
தலைமையாசிரியர் சஸ்பெண்ட்- அதிரடி கைது
இதைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு விக்ரமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அத்துடன், துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் திரு விக்ரமனை கைது செய்தனர். அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
இதைத் தொடர்ந்து, அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையாசிரியர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் இந்தப் பள்ளியில் பணிக்கு சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வேறு 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது, 9 பள்ளி மாணவிகள் பாலியல் புகாரால் கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை! 5 பேர் உயிரிழப்பில் சிக்கிய உருக்கமான கடிதம்!