குடிசை வீட்டில் தீ வைத்த மர்ம நபர்கள் – 2 பேர் உடல் கருகி பலி – திருவண்ணாமலை அருகே சோகம்
Couple Burnt Alive: திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசை வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை, ஜனவரி 2 : திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில், விவசாய நிலத்தில் தம்பதி தங்கியிருந்த குடிசைக்கு மர்ம கும்பல் தீ (Fire) வைத்ததில் இருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் சக்திவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவருக்குச் சொந்தமான ஏரிக்கரை ஓரம் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். சக்திவேலுக்கு தமிழரசி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழரசி தனது மூன்று குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தாண்டபட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அமிர்தத்திற்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படிக்க : பாதயாத்திரை சென்ற இரு ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…பக்தர்கள் வந்த வேனால் சம்பவம்!




முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அமிர்தம், சக்திவேலுடன் சேர்ந்து, விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் ஜனவரி 1, 2026 நள்ளிரவு, சக்திவேல் மற்றும் அமிர்தம் இருவரும் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் குடிசையின் வெளிப்பக்கமாக கதவை பூட்டி, அவர்கள் வெளியே வர முடியாத வகையில் தீ வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தீ மளமளவெனப் பரவியதில், வீட்டிற்குள் சிக்கிய தம்பதி இருவரும் வெளியே வர முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : பைக்கில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம்…கியூ பிரிவு போலீசார் அலர்ட்…வேதாரண்யத்தில் பரபரப்பு சம்பவம்!
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? முதல் மனைவி தமிழரசிக்கு இதில் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து வலை வீசி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.