புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து -40க்கும் மேற்பட்டோர் பலி – ஸ்விட்சர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Switzerland Fire Tragedy : சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்கி ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு (New Year) கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மண்டலத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள கிரான்ஸ் மொன்டானா என்ற நகரில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வந்த லெ கான்ஸ்டெலேஷன் என்ற பாரில் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அந்த நேரத்தில் அந்த பாரில் 100க்கும் மேற்பட்டோர் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து மிக வேகமாக பரவியதால் பலர் வெளியே வர முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து
இந்த சம்பவம் தொடர்பாக வாலிஸ் கான்டன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கேத்தன் லாதியான் கூறுகையில், பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் பலர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தினார். இருப்பினும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் சரியான எண்ணிக்கை தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை என்றும், விசாரணை தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக கிரான்ஸ்-மொன்டானா வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : சீனாவில் மளிகை பொருள் போல வெள்ளி விற்பனை…என்ன காரணம்!
இந்த நகரம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்கி ரிசார்ட் என்பதால், பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு புத்தாண்டை கொண்டாட வந்திருந்தனர். சுவிட்சர்லாந்து நாளிதழான ப்ளிக் வெளியிட்ட தகவலின் படி, சம்பவ இடத்தில் இருந்த ஒரு மருத்துவர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 பேர் இருக்கலாம் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லெ நுவெல்லிஸ்ட் என்ற உள்நாட்டு நாளிதழ், சுமார் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தனது தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள்
A severe explosion in the ski town of Crans-Montana in #Switzerland:
the police report several dead and injured in an incident that broke out in the area of the New Year’s event.
Emergency forces are on site and an investigation has been opened to determine the cause of the… pic.twitter.com/iioVEjVP1q
— War & Political News (@Elly_Bar_News) January 1, 2026
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள உறுதி செய்யப்படாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பாரில் பெரும் தீப்பற்றியதை காண முடிகிறது. இந்த வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதும், போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்க பல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக தனி தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!
பாதுகாப்பு காரணங்களுக்காக கிரான்ஸ்-மொன்டானா பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை. சிலஊடகங்கள், இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், போலீசார் இதனை உறுதிப்படுத்தவில்லை என்றும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிரான்ஸ்-மொன்டானா நகரம், சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. 87 மைல் நீளமுள்ள ஸ்கி பாதைகளைக் கொண்ட இந்த நகரம், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. வரும் ஜனவரி இறுதியில், இங்கு எஃப்ஐஎஸ் உலகக் கோப்பை ஸ்பீடு ஸ்கீயிங் போட்டி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்து, புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.