நாடாளுமன்றத்திற்கு அருகே எம்பி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – பரபரப்பு சம்பவம்
Delhi Fire : டெல்லியில் நாடாளுமன்றத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள எம்.பிக்கள் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியே பெரும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

டெல்லியில் (Delhi) உள்ள டாக்டர் விஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் அக்டோபர் 18, 2025 பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநிலங்களவை எம்.பி.க்களின் பெரும்பாலான குடியிருப்புகள் உள்ளன. நாடாளுமன்ற (Parliament) கட்டிடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் உள்ளூர்வாசிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும் தீயணைப்பு வாகனங்கள் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
தாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள்
இதனையடுத்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் அங்கு வந்து தீயணைக்க போராடி வருகின்றன. இந்த சம்பவத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில், எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க : ஒரு மருத்துவரின் 8 வருட போராட்டம்.. இனி உணவுப்பொருட்களில் ORS என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது..




குடியிருப்பு வாசிகள் அனைவரும் ராஜ்யசபா எம்.பி.க்கள். அந்தக் கட்டிடம் நாடாளுமன்றத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. 30 நிமிடங்களில் தீயணைப்புத் துறையினர் வரவில்லை. தீ இன்னும் எரிந்து பரவி வருகிறது. பலமுறை அழைப்பு விடுத்தும், தீயணைப்பு வாகனங்களை காணவில்லை. இதற்கு டெல்லி அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பல லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசம்
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் வசிக்கும் வினோத் பேசியதாவது, என் நாய் உள்ளே சிக்கியிருக்கிறது. என் மகளின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. அதற்காக நாங்கள் வாங்கிய நகைகள், தங்கம் மற்றும் துணிகள் அனைத்தும் உள்ளே உள்ளன. என் மனைவிக்கும் மகனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ எப்படி தொடங்கியது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என் வீடு மூன்றாவது மாடியில் உள்ளது என்றார்.
இதையும் படிக்க : Rajasthan: சாலையில் தீப்பிடித்த பேருந்து… 20 பேர் உயிரோடு எரிந்த பரிதாபம்
இந்தப் பகுதி மிகவும் முக்கியமான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் இங்கே தாமதமாக வந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுவரை பெரிய சேதம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தீயை கட்டுப்படுத்தவும் சேதத்தை மதிப்பிடவும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.