Crime: மக்களே உஷார்.. சைபர் மோசடியில் ரூ.7 கோடியை இழந்த மருத்துவர்!
Cybercrime Scam: மகாராஷ்டிராவில் மூத்த மருத்துவர் ஒருவர் ₹7.17 கோடி சைபர் கிரைம் மோசடியில் சிக்கினார். உச்ச நீதிமன்றம், காவல்துறை பெயரில் போலி ஆவணங்கள், டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் பணத்தைப் பறித்துள்ளனர். வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்ட்ரா, அக்டோபர் 16: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மூத்த மருத்துவர் ஒருவர் சைபர் கிரைம் மோசடியில் ரூ.7 கோடிக்கு மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025, அக்டோபர் 13ம் தேதி அம்மாநிலத்தின் அஹில்யாநகரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த மருத்துவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடம் உச்ச நீதிமன்றம், அமலாக்க இயக்குநரகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெயரில் போலி ஆவணங்களை அனுப்பி பணத்தை மாற்றும்படி சிலர் கட்டாயப்படுத்தினர். கடந்த 2025, செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை வரை எனக்கு தெரியாத எண்களில் இருந்து மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் வந்தன. அதில் ஒரு அழைப்பில், என் மீது சட்டவிரோத விளம்பரம், ஆபாசம் மற்றும் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சிலர் விசாரணை செய்தனர்.
பின்னர் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் நீதிபதி என் முன் வீடியோ காலில் தோன்றி மருத்துவரான நான் டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் ஆன்லைன் மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
Also Read: டிஜிட்டல் கைது என கூறி மோசடி.. முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.23 கோடி கொள்ளையடித்த கும்பல்!




மேலும் நீங்கள் இப்போது வீட்டுக் காவலில் இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். உங்கள் கணக்கில் கருப்புப் பணம் உள்ளது. நீங்கள் கைது செய்யப்படலாம், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று என்னை மிரட்டினர். அவர்கள் தரப்பில் இருந்து எனக்கு நம்பிக்கையைப் பெறுவதற்காக உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் பெயர்களில் போலியான உத்தரவுகள், அறிவிப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை கூட அனுப்பினர்.
அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக என்னிடம் இருந்த ரூ.7.17 கோடியை அவர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு மிகப்பெரிய அளவில் எதிர் தரப்பினர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனுப்பிய ஆவணங்களை சரிபார்த்தபோது அவை போலியானது என தெரிய வந்தது. எனவே இந்த சம்பவத்தில் தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.
Also Read: போன் மூலம் நடக்கும் கிரெடிட் கார்டு மோசடிகள்; பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மேலும் தன்னுடைய புகாரில் அவர், பல செல்போன் எண்கள் மற்றும் பண பரிமாற்றம் நடந்த வங்கி கணக்குகளைப் பட்டியலிட்டுள்ளார், இதனையடுத்து புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவு விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய எண்கள் மற்றும் வங்கி கணக்குகளைக் கண்காணித்து இதில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய,மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றனது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான அடையாள அட்டை, வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் என எதையும் முன்பின் அறியாத நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.