டிஜிட்டல் கைது என கூறி மோசடி.. முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.23 கோடி கொள்ளையடித்த கும்பல்!
Employee Lost 23 Crores in Online Scam | சமீப காலமாகவே டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லியை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரிடம் இருந்து ரூ.23 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம் (Technology) எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ அதே அளவுக்கு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சிக்கல்களும், பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கமாக ஆன்லைன் மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடி சம்பவங்களை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையும், மோசடி சமபவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டிஜிட்டல் கைது மோசடியில் (Digital Arrest Scam) முன்னாள் வங்கி ஊழியர் ரூ.23 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் வங்கி ஊழியர் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.23 கோடி பணத்தை இழந்த நபர்
டெல்லியை சேர்ந்தவர் முன்னாள் வங்கி அதிகாரியான நரேஷ் மல்ஹோத்ரா. 78 வயதாகும் இவருக்கு ஜூலை மாதம் ஒரு செல்போன் கால் வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய மோசடி கும்பல் அவரது ஆதார் எண் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி அந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் பேசுவதாகவும் அந்த கும்பல் முதியவரை மிரட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, முதியவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் அந்த கும்பல் மிரட்டி வைத்துள்ளது.
இதையும் படிங்க : இனி தொலைந்த லேப்டாப்பை ஈஸியா கண்டுபிடிக்கலாம் – எப்படி தெரியுமா?




தினமும் 2 மணி நேரம் வீட்டில் டிஜிட்டல் கைதில் இருந்த முதியவர்
மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்துப்போன முதியவர் தினமும் இரண்டு மணி நேரம் வீட்டின் அறையில் டிஜிட்டல் கைதில் இருந்துள்ளார். அப்போது அந்த கும்பல் முதியவரிடம் பணம் அனுப்ப கோரி கேட்டுள்ளது. பணம் அனுப்புவது குறித்து யாரிடமும் பேச கூடாது என்றும், அவ்வாறு வெளியே கூறினால் குடும்ப உறுப்பினர்களையும் வழக்கில் சேர்த்துவிடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் பயந்துப்போன முதியவர் பல தவணைகளாக பணம் அனுப்பியுள்ளார். அவர் பணம் அனுப்பிய பிறகு அந்த கும்பல் கூடுதலாக ரூ.5 கோடி கேட்டுள்ளது. அப்போது தான் முதியவருக்கு தான் ஏமாற்ற்பபட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : டிம் குக் முன்பு ஐபோன் 17-ஐ தவறவிட்ட இன்ஃப்ளூயன்சர்.. அடுத்து நடந்தது என்ன?
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சுமார் 4,000 வங்கி கணக்குகளை பயன்படுத்தி முதியவரிடமிருந்து ரூ.23 கோடி பணத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், கொள்ளை கும்பல் கொள்ளையடித்த பணத்தில் இருந்து போலீசார் ரூ.2.67 கோடியை முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.