Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajasthan: சாலையில் தீப்பிடித்த பேருந்து… 20 பேர் உயிரோடு எரிந்த பரிதாபம்

Jaisalmer Bus Accident: ராஜஸ்தானில் ஜெய்சால்மர்-ஜோத்பூர் சாலையில் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின் கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

Rajasthan: சாலையில் தீப்பிடித்த பேருந்து… 20 பேர் உயிரோடு எரிந்த பரிதாபம்
பேருந்து விபத்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 15 Oct 2025 07:31 AM IST

ராஜஸ்தான், அக்டோபர் 15: ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து 57 பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில் பிற்பகல் 3 மணியளவில் ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்டது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியுள்ளது.

இதனைக் கண்டு கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். ஆனால் பயணிகள் யாரும் கீழே இறங்கவிலை. இப்படியான நிலையில் அடுத்த சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

Also Read:   ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

நொடிப்பொழுதில் நடந்த விபத்து

இதனைக் கண்டு பதறிப்போன பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறுவதற்குள் முழுவதுமாக தீப்பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும், அவ்வழியாகச் சென்றவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் உதவினர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து கடுமையாக போராடி பேருந்தில் பிடித்த தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கொடூர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்தனர். காயமடைந்த பயணிகள் முதலில் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 16 பேர் பின்னர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விபத்தில் சிக்கிய பேருந்து ஐந்து நாட்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து அறிந்ததும் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா அக்டோபர் 14ம் தேதி இரவு ஜெய்சால்மருக்கு வந்தார். விபத்தில் சேதமடைந்த பேருந்தையும் அவர் ஆய்வு செய்ததாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ரயில் பள்ளி வேன் மீது மோதியது எப்படி..? யார் காரணம்..? காயமடைந்த வேன் டிரைவர் விளக்கம்!

காயமடைந்த அனைத்து பயணிகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து குடும்பங்களுக்கு தகவலறியும் வகையில் உதவி எண்கள் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்


இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.