பாதயாத்திரை சென்ற இரு ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…பக்தர்கள் வந்த வேனால் சம்பவம்!
Theni Road Accident Two Ayyappa Devotees Died: தேனியில் பாதையாத்திரை சென்ற இரு பக்தர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் பயங்கரமாக மோதிய விபத்தில் இரு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதையாத்திரை சென்று வருவது வழக்கமாகும். அதன்படி, மாரிசாமி (எ) குருசாமி தலைமையில் ராம்கி உள்ளிட்ட 8 பேர் ஆண்டிப்பட்டியில் இருந்து நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 1) பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 2) அதிகாலை சின்னமனூர் அருகே உள்ள கோட்டூர்- சீலையம்பட்டி பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இரு பக்தர்கள் மீது பயங்கரமாக மோதிய வேன்
அப்போது, அந்தக் குழுவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் முன்னாள் நடந்து சென்ற நிலையில், மாரிசாமி மற்றும் ராம்கி ஆகியோர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் எதிர்பாராத விதமாக மாரிசாமி, ராம்கி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில், இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: 2026 புத்தாண்டில் கிடைத்த மகிழ்ச்சி.. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 545 குழந்தைகள்..




வேன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு
இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து உயிரிழந்த இரு ஐயப்ப பக்தர்களின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக சின்னமனூர் போலீசார் வேன் ஓட்டுனரான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், மேலப்பாடியூரைச் சேர்ந்த சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் வேன் மோதி இரு பக்தர்கள் பலி
விபத்தில் உயிரிழந்த மாரிசாமி ஆண்டிப்பட்டியில் மருந்தகம் நடத்தி வந்தார். இவரது மனைவி கல்பனா தேவி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். விபத்தில் உயிரிழந்த ராம்கி சலவை தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதி இரு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் கவனத்துக்கு…மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை திடீர் ரத்து!