நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் கவனத்துக்கு…மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை திடீர் ரத்து!
Mettupalayam To Ooty Mountain Train: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு பிறகு, கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. அவ்வப்போது, வெயிலும் அடித்து வந்தது. இந்த நிலையில், திடீரென நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 1) இரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தென்காசி மாவட்டத்தில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது, சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதையில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல், இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 2) காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் புறப்பட்டது. இந்த ரயிலானது கல்லாறு அருகே சென்ற போது, மண் சரிவு ஏற்பட்டதாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் ரத்து
அதன் பேரில், இந்த ரயிலானது கல்லாறு பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால், இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) மற்றும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று மழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!




நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சுற்றுலா தளங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதே போல, நீலகிரி மாவட்டத்திற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள், நீலகிரி மாவட்டத்தில் பிரபலமான மலை ரயிலில் பயணம் செய்வதை அதிகளவு விரும்புவர்.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சோகம்
இதற்காகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில் பயணத்துக்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு பண்டிகை ஆகிய நேரத்தில் மண் சரிவால் மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது அவர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டு எப்போது மலை ரயில் சேவை
இந்த மலை ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த மலை ரயில் சேவை மீண்டும் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்..