புத்தாண்டு தினத்தில் அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலைகள் – எவ்வளவு தெரியுமா? மக்கள் மகிழ்ச்சி
Vegetable Price Update : புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2026 அன்று காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . கோயம்பேடு காய்கறி சந்தையின் நிலவரப்படி கிலோவுக்கு எவ்வளவு குறைந்துள்ளது உள்ளிட்ட தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 1 : புத்தாண்டு (New Year) கொண்டாட்டத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில், காய்கறி விலைகளில் ஏற்பட்ட திடீர் குறைவு பொதுமக்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி ஜனவரி 1, 2026 இன்று காலை, கோயம்பேடு சந்தை நிலவரம் குறித்து சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். புத்தாண்டின் முதல் நாளில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், இது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறினார்.
காய்கறிகளின் விலை குறைவு
இதுகுறித்து மேலும் பேசிய அவர், மழை பெய்து வரும் சூழலிலும் காய்கறி வரத்து சீராக இருப்பதாகவும், அதனால் விலைகள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய விலை நிலவரப்படி, ஊட்டி கேரட் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. முதல் தர கேரட் கிலோவுக்கு 40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 30 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : “விபத்துகள், குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினம்”.. சென்னை போலீசாருக்கு குவியும் பாராட்டு!!




- முட்டைகோஸ் விலை கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. முதல் தரம் 15 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 13 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெண்டைக்காய் விலை கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. முதல் தர வெண்டைக்காய் 35 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- இதற்கு மாறாக முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 40 ரூபாய் உயர்வுடன், முதல் தர முருங்கைக்காய் 320 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 270 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 260 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
- மேலும் காலிபிளவர் விலையும் குறைந்துள்ளது. கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து, 40 ரூபாய் மற்றும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிளகாய் கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- பொள்ளாச்சி தேங்காயை பொறுத்தவரை காய்க்கு 2 ரூபாய் உயர்ந்து முதல் தரம் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உடுமலை தேங்காயை பொறுத்தவரை காய்க்கு 1 ரூபாய் குறைந்து 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- தக்காளி விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. மாடர்ன் தக்காளி கிலோவுக்கு 60 ரூபாய்க்கும், மற்ற தக்காளி வகைகள் 50, 40 மற்றும் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வெங்காயம் கிலோவுக்கு 30 மற்றும் 26 ரூபாய்க்கும், கர்நாடகா வெங்காயம் 24 மற்றும் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு 25, 20 மற்றும் 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 55, 50 மற்றும் 40 ரூபாய்க்கும் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!
இன்றைய கோயம்பேடு சந்தை விலைப்பட்டியலின்படி, பீன்ஸ் கிலோவுக்கு 30 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 40 ரூபாய், கர்நாடகா பீட்ரூட் 25 ரூபாய், சௌ சௌ 10 ரூபாய், முள்ளங்கி 15 ரூபாய், முட்டைகோஸ் 17 ரூபாய், வெண்டைக்காய் 40 ரூபாய், உஜாலா கத்திரிக்காய் 15 ரூபாய், கோடு கத்திரிக்காய் 12 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய், பட்டாணி 35 ரூபாய், இஞ்சி 60 ரூபாய், பூண்டு 100 ரூபாய் மற்றும் அவரைக்காய் 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புத்தாண்டு தினத்தில் காய்கறி விலைகள் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். வரத்து நிலவரம் தொடர்ந்தால், வரும் நாட்களிலும் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.