தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Free cancer vaccination: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்கள் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் இலவசமாக போடப்பட உள்ளது. பெண்களுக்கு அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
சென்னை, அக்டோபர் 27: தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் வயிறு புற்றுநோய் ஆகிய ஐந்து வகைகள் தான் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், புற்றுநோயின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில், தமிழகஅரசு 2023ஆம் ஆண்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு, பல்வேறு தடுப்பு நடுவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நடைபயிற்சி மேற்கொண்டால் புற்றுநோய் வராது:
இதுதொடர்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கால் நூற்றாண்டுக்குப் பிறகு உலகில் சில இடங்களில் போலியோ தலைத் தூக்கி உள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் போலியோ பாதிப்பு வந்திடுமோ என்று ஒரு அறிவுறுத்தல்கள் வந்துள்ளது, அந்த 6 மாவட்டங்களில் போலியோ தடுப்பு மருந்துகளை போட்டு வருகிறோம் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், சில பேர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நடந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், தினம்தோறும் நடப்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் புற்றுநோய் வருவதில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது என்றும், புற்று நோய்களை தடுப்பதற்காக நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டால் புற்றுநோய் வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.




Also read: கரூர் துயரம்.. பாதிக்கப்பட்டவர்களை ஒரு மாதத்திற்கு பிறகு சந்திக்கும் தவெக தலைவர் விஜய்!
மேலும், சுமார் கடந்த நான்காயிரம் ஆண்டுகளாக மனித இனமானது புற்று நோயுடன் உயிருக்கு போராடி வருவதாக கூறினார். இதற்காக பல நவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை புற்று நோய்க்கு எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அண்மையில் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து சாதனை படைத்தது என்றார். அதோடு, கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இளம்பெண்களை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீட்க, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்காத முயற்சியை முதல்வர் ஸ்டாலின் எடுத்தார்.
ரூ.15,000 மதிப்பிலான தடுப்பூசி இலவசம்:
அந்தவகையில், புற்றுநோய் தடுப்பூசி திட்டத்திற்காக ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, டெண்டர் முடிந்தவுடன் இந்தியாவில் எங்கும் இல்லாமல் தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்கள் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.15,000 வரை செலவாகிறது. எனவே, புற்றுநோய் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ளும் வகையில், இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
Also read: Bra Hygiene: ஒரே பிராவை எத்தனை முறை அணிவது சரி..? எந்த தவறு பிரச்சனையை தரும்..?
விரைவில் அந்த பணிகள் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை தொடங்கினால் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டம் ஏற்படும். இந்தியாவில் 1 லட்சம் பேரில் 28 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கூறினார்.