2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
Nainar Nagendran: அரியலூர் மாவட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
அரியலூர், அக்டோபர் 26, 2025: தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்டம் தோறும் சென்று, கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு இடையில், வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை நேரில் சந்தித்து நெல் கொள்முதல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அதே சமயத்தில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்:
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 2025 அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பிரச்சாரத்தை மதுரை மாவட்டத்திலிருந்து தொடங்கிய அவர், அதன் தொடர்ச்சியாக 25 அக்டோபர் 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: சேலம் வழிப்பறி சம்பவத்தில் புதிய திருப்பம்…. தோழியிடம் இன்ஸ்டாகிராமில் தவறாக பேசியதால் தகராறு- பிளான் போட்டு தூக்கிய இளைஞர்கள்
திமுகவிற்கு இன்னும் 169 நட்கள் மட்டும்தான்:
அப்போது பேசிய அவர், “அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது; கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 169 நாட்களே திமுகவிற்கு உள்ளது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும்; எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார்,” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. திமுக – காங்கிரஸ் இடையே வெடிக்கும் மோதல்!!
“தமிழகத்தில் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டு உள்ளது என்பது அரசுக்கு ஜூன் மாதத்திலேயே தெரிந்த ஒன்று. ஆனால் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், விவசாயிகள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட ஆட்சி நமக்கு தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வராக இருந்து ஒன்றுமே செய்யவில்லை:
அவர் மேலும் கூறியதாவது: “நவம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் வந்து விடும். அதனைத் தொடர்ந்து தேர்தலும் நெருங்கிவிடும். இப்படி இருக்கக்கூடிய சூழலில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘உங்களுடன் முதலமைச்சர் நான்தான்; உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நான்தான்’ என தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களுக்கு தேவையான எந்தத் திட்டத்தையும் அவர் செய்து வைக்கவில்லை. இந்த ஆட்சிக்கு மணி அடிக்கப்பட்டுவிட்டது. 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும்,” என தெரிவித்தார்.