சேலம் வழிப்பறி சம்பவத்தில் புதிய திருப்பம்…. தோழியிடம் இன்ஸ்டாகிராமில் தவறாக பேசியதால் தகராறு- பிளான் போட்டு தூக்கிய இளைஞர்கள்
Case Twist Revealed: சேலம் புதிய பேருந்துநிலையம் அருகே மேம்பாலத்தில் நடந்துவந்த திருநெல்வேலியைச் சேர்ந்தவரை 3 இளைஞர்கள் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில் முன்விரோதமாக அந்த நபரை இளைஞர்கள் தாக்கியது தெரியவந்திருக்கிறது.
சேலம் (Salem) புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தில், அக்டோபர் 25, 2025 அன்று காலையில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் இப்பாலம், பொதுவாக மக்கள் நெரிசல் காணப்படும் இடமாகும். இந்த நிலையில் திருநெல்வேலி (Thirunelveli) மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அக்டோபர் 25, 2025 அன்று காலை மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்து, தனியாக நடந்தவரை திடீர் எனத் தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறித்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் இளைஞரைத் தாக்கி வழிப்பறி?
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் நடந்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த இளைஞரை, அவ்வழியாக வந்த 3 இளைஞர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த பொபைல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்ததோடு, அவரைக் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் மக்கள் போக்குவரத்து நிறைந்த இந்த மேம்பாலத்தில் வழிப்பறி சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கரூர் பிளானை கேன்சல் செய்யும் விஜய்? என்ன காரணம்? வெளியான தகவல்..
தாக்குதலில் காயம் அடைந்த இளைஞரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெறும் போது அங்கு இருந்த சிலர் இளைஞர் தாக்கப்படும் சம்பவத்தை, தங்களது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேம்பாலம் மற்றும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
வழிப்பறி சம்பவத்தில் புதிய திருப்பம்
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குல் சம்பவம் நடைபெற்றதாக விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ராமகிருஷ்ணன், வினித்குமார், பிரதீப் ராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..
அப்போது, தங்கள் தோழியிடம் இன்ஸ்டாகிராமில் தவறாக நடந்துகொண்டதாக, நெல்லை பிரம்மநாயகத்தை சேலம் வரவழைத்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. தனது தோழிக்காக ராமகிருஷ்ணன், தனது நண்பர்களோடு சேர்ந்து நெல்லை பிரம்மநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். அவர்களின் எதிர்காலத்தைக் கருதி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பவில்லை என்றார்.



