கரூர் பிளானை கேன்சல் செய்யும் விஜய்? என்ன காரணம்? வெளியான தகவல்..
Vijay Karur Visit: 41 பேரின் குடும்பத்தினரையும் கரூரில் உள்ள மண்டபத்தில் வைத்து தவெக தலைவர் விஜய் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, அக்டோபர் 25, 2025: கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இந்த சூழலில், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தரப்பில் தொடர்ந்து பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக போட்டியிடத் தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பல்லாவரம் வாரச் சந்தை.. 600 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..
கரூர் கூட்ட நெரிசல்:
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால், கரூரில் பிரச்சாரம் நடந்த இடத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..
காணொளி காட்சி மூலம் விஜய் சந்திப்பு:
ஆனால், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இதுவரை கரூர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பது பெரும் விமர்சனத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் காணொளி காட்சி வாயிலாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “நிச்சயம் கரூருக்கு சென்று மக்களை நேரில் சந்திப்பேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்காக அனுமதி கேட்டு, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
முதலில், 41 பேரின் குடும்பத்தினரையும் கரூரில் உள்ள மண்டபத்தில் வைத்து விஜய் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் திட்டத்தில் மாற்றம்:
அதாவது, 41 குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து, அங்கு இருக்கும் ஒரு மண்டபத்தில் தலைவர் விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய் கரூர் மக்களை நேரில் சந்திக்காதது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பது மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் கட்சித் தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.