Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..

Tholkappia Park: சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும் தொல்காப்பிய பூங்காவில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.20 கிலோமீட்டர் நீளமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..
தொல்காப்பிய பூங்கா
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Oct 2025 19:31 PM IST

சென்னை, அக்டோபர் 24, 2025: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, அதாவது அக்டோபர் 24, 2025 அன்று திறந்து வைத்தார். கடந்த காலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த தொல்காப்பிய பூங்காவை மேம்படுத்துவதற்காக 2021 ஜூலை மாதம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக தொல்காப்பிய பூங்கா மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது.

புது பொலிவுடன் தொல்காப்பிய பூங்கா:


இதனைத் தொடர்ந்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சுற்றும் வியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்பு பாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தொல்காப்பிய பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைக்கப்பட்டு, சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: களத்தில் 22,000 பேர்.. பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி..

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும் இந்த பூங்காவில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.20 கிலோமீட்டர் நீளமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட இந்த பூங்காவை பொதுமக்கள் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர) இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சிக்காக கல்வி நிறுவனங்கள் அதிகபட்சம் 100 மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம்.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகள் செவ்வாய்க்கிழமையும் சனிக்கிழமையும், அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள் வெள்ளிக்கிழமையும், தனியார் பள்ளிகள் திங்கட்கிழமை, புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூங்காவை பார்வையிடலாம். பூங்காவின் பராமரிப்பு காரணமாக வியாழக்கிழமை விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • அனைத்து நாட்களிலும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க: மாணவர்களே..! நோ ஹாலிடே.. நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..

 

நுழைவு கட்டண விவரம்:

  • பூங்காவை பார்வையிடுவதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.10, பொதுமக்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. நடைப்பயிற்சிக்கான ஒருமுறை நுழைவு கட்டணம் ரூ.20 ஆகும்.
  • நடைப்பயிற்சி அனுமதி இணையதளத்தின் மூலம் பெறப்பட்டால், ஒரு மாதத்திற்கு ரூ.500, மூன்று மாதங்களுக்கு ரூ.1,500, ஆறு மாதங்களுக்கு ரூ.2,500 மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ.5,000 வசூலிக்கப்படுகிறது.
  • மகிழுந்துக்கு ரூ.20, சிற்றுந்து அல்லது பேருந்துக்கு ரூ.50, புகைப்படக் கருவிக்கு ரூ.50 மற்றும் ஒளிப்பதிவு கருவிக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • மேலும், நுழைவுச்சீட்டுக் கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்கள் குறித்து www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.