Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

களத்தில் 22,000 பேர்.. பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி..

Greater Chennai Corporation: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை விரைவாக அகற்றுவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 பேர், மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் 2,149 களப்பணியாளர்கள் ஆகியோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களத்தில் 22,000 பேர்.. பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Oct 2025 17:48 PM IST

சென்னை, அக்டோபர் 24, 2025: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகள், மேலும் 100 குதிரை திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மீது பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டு வருகிறது. இதே நேரத்தில், வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி:

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தால், அது கடலோர மாவட்டங்களை ஒட்டி நகரும் வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி நடந்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: மாணவர்களே..! நோ ஹாலிடே.. நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, நகரின் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தயார் நிலையில் 1,436 மோட்டார் பம்புகள்:

மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக பல்வேறு திறன்களில் செயல்படும் 1,436 மோட்டார் பம்புகள், அதில் 100 குதிரை சக்தி கொண்ட 150 மோட்டார் பம்புகள், மேலும் டிராக்டர் மீது பொருத்தப்பட்ட 500 மோட்டார் பம்புகள் ஆகியவை தயாராக உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை..

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக 15 ஹைட்ராலிக் மரஅறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மரஅறுவை அரிவாள்கள், மற்றும் 216 டெலஸ்கோப்பிக் மரஅறுவை இயந்திரங்கள் என மொத்தம் 457 மரஅறுவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

களத்தில் 22,000 பேர்:

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை விரைவாக அகற்றுவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 பேர், மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் 2,149 களப்பணியாளர்கள் ஆகியோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.