அணுகுண்டு மாலை.. தீபாவளி ரீல்ஸ் வீடியோ.. மதுரையில் இருவர் கைது!
Madurai Diwali Reels: மதுரையில் தீபாவளி அன்று அணுகுண்டு பட்டாசை மாலையாகக் கட்டி, பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பரவிய இந்த அதிர்ச்சி வீடியோ குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
மதுரை, அக்டோபர் 24: மதுரையில் தீபாவளியை முன்னிட்டு அணுகுண்டு வெடியை மாலையாக கட்டி அதில் பெட்ரோல் ஊற்றி வெடித்த சம்பவத்தில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருந்தாலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பலரும் பட்டாசுகளை வெடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அந்த வகையில் வாகனத்தில் சென்று கொண்டே பட்டாசுகளை வெடிப்பது, போகிற போக்கில் சாலைகள் செல்பவர்கள் மீது பட்டாசுகளை வீசுவது போன்ற விபரீத காரியங்களில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மதுரையை அலற வைத்த வீடியோ
இந்த நிலையில் தீபாவளி நாளில் மதுரை மாவட்டத்தை ஒரு வீடியோ மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது ஆரப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள “நம்ம மதுரை” என்ற போர்டு அருகே சில இளைஞர்கள் அணுகுண்டு பட்டாசை மாலையாக கோர்த்து அதனை அணிந்து கொண்டு ஊர்வலம் செல்கின்றனர். பின்னர் அந்த போர்டின் மீது எறிகின்றனர்.
Also Read: தமிழ்நாட்டில் 13 இடங்களில் பட்டாசினால் தீ விபத்து – தீயணைப்புத்துறை சொன்ன பகீர் தகவல்
இந்த வீடியோவை சில இளைஞர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோவில் நாங்கள் எல்லாம் அணுகுண்டு பயலுகடா என்றபடி வைகை ஆற்றின் கரையோர படிக்கட்டில் அணுகுண்டு மாலை போட்டு அதில் பெட்ரோலை ஊற்ற எரிக்க அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி மக்கள் சிறிது நேரம் என்ன நடந்தது என தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவு பேரில் தனிப்படை போலீசார் வீடியோவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை தத்தனேரி கீழ் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் சந்துரு, அரசரடி பகுதியைச் சேர்ந்த முத்துமணி மற்றும் வீரணன் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகள் கீழ் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லோகேஷ் சந்துரு, முத்துமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான வீரணனை தேடி வரும் பணி நடைபெற்று வருகிறது.
Also Read: தீபாவளி மது விற்பனையில் புதிய ரெக்கார்ட்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்!
சமூக வலைத்தள மோகத்திற்கு அடிமையாகி உள்ள பலரும் இதுபோன்ற பிரபலம் பெற வேண்டும் என பல்வேறு ஆபத்தான மற்றும் அநாகரிகமான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையும் எச்சரிக்கை மற்றும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.