Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னிடம் சொல்லாம எப்படி தண்ணீர் திறந்தீங்க? செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் – செல்வப்பெருந்தகை கோபம்

Chembarambakkam : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய நிலையில், ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து ஏரியில் ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.

என்னிடம் சொல்லாம எப்படி தண்ணீர் திறந்தீங்க? செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் – செல்வப்பெருந்தகை கோபம்
செல்வப்பெருந்தகை
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2025 18:13 PM IST

சென்னை, அக்டோபர் 22:  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை (Chennai) மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் குடிநீரின் முக்கிய ஆதாரமான செம்பரம்பாக்கம் (Chembarambakkam Lake) ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.  மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், ஏரியின் நீர்மட்டம் 21.20 அடி என்ற அபாயகரமான அளவை எட்டிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 21, 2025  மாலை 4 மணிக்கு முதற்கட்டமாக 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வெளியாகும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செல்வபெருந்தகை கோபம்

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை அக்டோபர் 22, 2025 அன்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டார். ஏரியின் தற்போதைய நீர்மட்டம், திறக்கப்படும் நீரின் அளவு போன்ற விவரங்களை அவர் பொது பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில் அதிகாரிகளின் செயலை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு முன் என்னிடம் சொல்ல வேண்டியது வழக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்வப்பெருந்தகை ஆய்வு

இதையும் படிக்க : சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!

ஏன் சொல்லாம திறந்தீங்க? நான் தான் எப்போதுமே இந்த ஏரியை நேரில் வந்து திறப்பது வழக்கம்.  நீங்கள் ஏரியை திறந்ததில் தவறில்லை. ஆனா அதைப்பற்றி எங்களுக்கு சொல்லாமல் திறக்கக்கூடாது. கடந்த வருடமும் நீங்கள் சொல்லாமல் தண்ணீர் திறந்தீங்க. மக்கள் பிரதிநிதிகள் தான் அரசை வழி நடத்த வேண்டும் அதிகாரிகள் அல்ல என்றார்.

முழுகொள்ளளவை எட்டிய சென்னையின் ஏரிகள்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் போன்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் ஆபத்தான அளவுக்கு சென்றுவிடாமல் தடுக்க, செம்பரம்பாக்க ஏரியில் தண்ணீர் திறப்பு அவசியமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை அக்டோபர் 22, 2025 அன்று குறைந்துள்ளது. பல இடங்களில் வெயில் எட்டிப்பார்த்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சென்னையில் அக்டோபர் 21, 2025 அன்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்யும் என எச்சரித்திருந்தார். மேலும் வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.