Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!

Chennai weather today: சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வலுப்பெற கூடும் என்பதால் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!
வடகிழக்கு பருமழை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2025 08:53 AM IST

சென்னை, அக்டோபர் 22: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகமாக உள்ள நிலையில் அதனை சமாளிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத் தீவிரமாக தனது வேகத்தை காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழக முழுக்க மழைத் தொடர்ந்து எதிர்பாராத அளவில் பெய்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி அன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அன்று காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே பகுதிகளில் நிலவியது.  இது அக்டோபர் 22 ஆம் தேதி மதியம் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

Also Read: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தொடங்கியது மழையின் ஆட்டம்.. பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடைய கூடும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அக்டோபர் 20ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 21ஆம் தேதி அதே பகுதிகளில் நிலைக் கொண்டு பின் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து 24 மணி நேரத்தில் காற்று மண்டலமாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி வருவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தை சமாளிக்கும் பொருட்டு சென்னை நகர போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படையில் மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனை தவிர சென்னை மாநகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென் சென்னையில் மட்டும் 23 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் 100 என்ற தொலைபேசி எண் மூலம் உதவி கேட்டால் உடனடியாக மீட்பு படையினர் உதவி கரம் நீட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் வாட்ஸப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உருவாக்கிய இந்த குழுவில் தன்னார்வலராக இணையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும், மழை வெள்ளத்தில் மக்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டால் உதவி செய்யவும் இந்த தன்னார்வலர்ககள் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.