பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்.. ஆய்வு மேற்கொண்ட மின்சாரதுறை அமைச்சர் சிவசங்கர்..
Minister Sivasankar Inspection: அமைச்சர் சிவசங்கர் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் மற்றும் மாநில மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையத்தில், மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, அக்டோபர் 20, 2025: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்கிறது. தொடர் மழையின் காரணமாக பல பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மின்விநியோகத்தில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, அமைச்சர் சிவசங்கர் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் மற்றும் மாநில மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையத்தில், மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் கோடைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில இடங்களில் மின்கம்பங்கள் அறுந்து விழுவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
- வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் மின்தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார் தெரிவிக்க மின்னகத்தில் கூடுதலாக 10 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 11 லட்சத்து 87 ஆயிரம் சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
- மாநிலம் முழுவதும் பழுதடைந்த 34,041 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
- தாழ்வாக செல்லும் 58,764 மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 233 பில்லர் பாக்ஸ்கள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக 1,135 மின்மாற்றிகள், 3,30,636 மின்கம்பங்கள், 8,515 கிலோமீட்டர் மின்கம்பிகள், 1,471 கிலோமீட்டர் புதைவடை கேபிள்கள் மற்றும் 3,00,415 மின் அளவிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும் புதிய சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் – தீபாவளி வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி..
அவசரநிலைக் கால பணிக்கான அறிவுறுத்தல்கள்:
- துணை மின் நிலையங்களில் டீசல் ஜெனரேட்டர்கள், நேர்வழி ஏற்ற மின்மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- மின்வெட்டு ஏற்பட்டால் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமையாக மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அறிவுரைகள்:
- அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், மின் கேபிள்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே செல்லக்கூடாது.
- சாலைகள் மற்றும் தெருக்களில் தங்கி கிடக்கும் நீரில் நடப்பது, ஓடுவது, விளையாடுவது அல்லது வாகனத்தில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
- தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார கம்பிகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- ஈரமான கைகளால் மின்சார சுவிட்ச்கள் அல்லது சாதனங்களை தொடக் கூடாது.
- வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களைத் தொடாமல் இருக்க வேண்டும்.