தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
Deputy CM Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துரைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றுவதற்கான திட்டங்கள், அவை எவ்வாறு செயல்படுகின்றன, வடிகால் வசதி போதுமானதா என்பதனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சென்னை, அக்டோபர் 21, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக வரவிருக்கும் நாட்களில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நல்ல அளவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில், சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, காரப்பாக்கம், ஒக்கியம் மடுவு போன்ற பகுதிகளில் வெள்ளநீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இடமாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
மழைநீர் தேங்கும் இடங்களில் உடனடியாக தண்ணீரை அகற்றும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ராட்சச மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் வடசென்னை, சுண்ணாம்புக்குளத்தூர், பள்ளிக்கரணை, துறைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ள நிலை காணப்படுகிறது.
நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு:
மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற செம்மொழி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வரும் vent clearance பணிகளை ஆய்வு செய்து, அதன் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு பகலாகப் பணி ஆற்றிவரும் பணியாளர்களை… pic.twitter.com/pkK3JE4Bn4
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) October 20, 2025
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துரைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றுவதற்கான திட்டங்கள், அவை எவ்வாறு செயல்படுகின்றன, வடிகால் வசதி போதுமானதா என்பதனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க: புகையால் சூழ்ந்த சென்னை.. காற்று மாசு 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..
மழைக்காலங்களில் தென் சென்னை பகுதிகள், குறிப்பாக மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சுண்ணாம்புக்குளத்தூர், துறைப்பாக்கம், சோழிங்கநல்லூர், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனை தீர்க்க, மழைநீரை விரைவாக வெளியேற்றும் வழிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் விரிவாக்கம், மண் மற்றும் கழிவுகள் அகற்றம், தடைசெய்யப்பட்ட வடிகால் பகுதிகளின் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ஆய்வு:
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் சென்னை எழிலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், வடகிழக்கு பருவமழையை தமிழகம் சந்திக்க தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன எனவும் தெரிவித்தார்.