ஆந்திர பேருந்து தீ விபத்து: திருப்பூர் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
Andra Pradesh Bus Accident: ஆந்திராவில் நேற்று காலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞர் விடுமுறைக்காக வீடு திரும்பிய போது இந்த ஆம்னி பேருந்து தீ விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பூர், அக்டோபர் 25: ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த இளைஞரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இ்டத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை ஐதராபத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட இந்த பேருந்து, நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை அடைந்த போது, பைக் ஒன்றின் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்திற்குள் இருந்த நிலையில், நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்துச் சம்பவத்தில் 20 பேரின் உயிர் பிரிந்துவிட்டது.
Also read: வரும் அக்.27 கரூர் மக்களை சந்திக்கும் விஜய்.. எங்கே? வெளியான தகவல்..




அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. அதோடு, பைக்கின் மீது பேருந்து மோதியதும், சில அடி தூரத்திற்கு பைக் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் வேகமாக சாலையில் உரசியதால் பைக் தீ பற்றியுள்ளது. அதோடு, பேருந்தின் டீசல் டேங்க் அருகே இருந்ததால், உடனடியாக அதில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அனைத்துமே நொடிப்பொழுதில் நிகழ்ந்துள்ளது. ஓட்டுநர் என்ன நடந்தது என்று சுதாரித்து பேருந்தை நிறுத்துவதற்குள் தீ பற்றிய எரிய தொடங்கியுள்ளது. அதேசமயம் தீ பற்றியதும் பேருந்தின் கதவுகள் திறக்க முடியாதபடி அடைப்பட்டுக்கொண்டன. அதோடு, அதிகாலை என்பதால் பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிய, பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகள் வெளியேற முயற்சித்துள்ளனர். அந்த பேருந்தில் பாதுகாப்பு அம்சமாக பொருத்தப்பட வேண்டிய சுத்தியலும் பொருத்தப்படவில்லை என்று உயிர் தப்பிய பயணிகள் குற்றம்சாட்டியிருந்தனர். எனினும், கஷ்டபட்டு கண்ணாடியை உடைத்து கிழே குதித்தவர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பலர் என்ன நடந்தது என்பதே அறியாமல் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
இந்நிலையில், இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த யுவன்சங்கர் ராஜா (22) ஜதராபாத்தில் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைக்காக ஊருக்கு திரும்பிய நிலையில், விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது தந்தை தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். யுவன்சங்கருக்கு தீபாவளி சமயம் விடுமுறை கிடைக்காததால், தீபாவளி முடிந்து பெற்றோரை பார்க்க வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது தெரியவந்துள்ளது.