Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..

TVK Leader Vijay: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், “ 2026 இல் போட்டி என்பது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே மட்டும்தான். நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே என் மீது இவ்வளவு நம்பிக்கையா? பார்த்து விடலாம்... ஒரு கை பார்த்து விடலாம்” என பேசியுள்ளார்.

என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..
நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2025 16:10 PM IST

நாமக்கல், செப்டம்பர் 27, 2025: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாக வருகிறது. அந்த வகையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட செயலாளர் கூட்டங்கள், பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் அதன் கட்சி தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வதைத் தொடங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்:

செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 27, 2025 இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதலில் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றடைந்த விஜய், அப்பகுதியின் பெருமை மற்றும் மாவட்டத்திற்குரிய சிறப்பை பற்றி பேசியிருந்தார். அதேபோல் திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதையும் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

அதிமுக, பாஜக, திமுக போல் இருக்க மாட்டோம்:

இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளை விமர்சித்து மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியது, “ நான் எப்போதும் சொல்வது போல, இந்த பாசிச பாஜக அரசோடு எப்போதும் ஒத்துப் போக மாட்டேன். இரண்டாவது, திமுக அரசைப் போல அண்டர் கிரவுண்ட் டீலிங், மறைமுக உறவுக்காரர்களா இந்த பாஜகவுடன் எப்போதுமே இருக்க மாட்டோம்.

மூன்றாவது, மூச்சுக்கு 300 முறை ‘அம்மா, அம்மா’ என சொல்லிவிட்டு, ஜெயலலிதா சொன்ன எதையுமே கடைபிடிக்காமல், ‘நல்லதுக்காக தான் இந்த கூட்டணியை அமைத்தோம்’ என சொல்லிக் கொள்ள்பவர்களைப் போலவும் நாங்கள் இருக்க மாட்டோம்.

தமிழ்நாட்டிற்கு பாஜக என்ன செய்தது?

இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? நீட்டை ஒழித்தார்களா? கல்விக்கு தேவையான நிதியை முழுமையாக கொடுத்தார்களா? தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தார்களா? பின்னர் ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி? நான் கேட்கவில்லை; புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் தான் கேட்கிறார்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது, “இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதிமுக மற்றும் பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. அந்த கூட்டணியில் நம்பிக்கை இல்லை என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அதே சமயம், இந்த திமுக குடும்பம் இந்த பாஜகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங், மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு ஓட்டு போட்டால், அது பாஜகவிற்கு ஓட்டு போட்டது போலத்தான். ஜாக்கிரதையாக இருங்க மக்களே… யோசியுங்கள்!”

ஒருகை பாத்திடலாம்:

“மீண்டும் சொல்கிறேன் — 2026 இல் போட்டி என்பது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே மட்டும்தான். நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே என் மீது இவ்வளவு நம்பிக்கையா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? பார்த்து விடலாம்… ஒரு கை பார்த்து விடலாம்… சத்தியமாக சொல்கிறேன், கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன் ‘ஏதோ…’ என்று நினைத்தேன். பார்த்திடலாம்! நம்பிக்கையா இருங்க மக்களே… நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்!” என பேசியுள்ளார்.