வரும் அக்.27 கரூர் மக்களை சந்திக்கும் விஜய்.. எங்கே? வெளியான தகவல்..
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை அருகே இருக்கும் மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 27 2025 தேதி அன்று அதாவது திங்கள்கிழமை குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.
சென்னை, அக்டோபர் 25, 2025: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை அருகே இருக்கும் மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 27 2025 தேதி அன்று அதாவது திங்கள்கிழமை குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். முதலில் கரூர் சென்று மக்களை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் போதிய அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: அதிமுக எம்.பி தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி
கரூர் துயர சம்பவம்:
அப்போது, கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பிரச்சாரம் முடிந்ததைத் தொடர்ந்து அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆதரவும் ஆறுதலும் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பது பெரும் பேசுபொருளாக மாறியது.
மேலும் படிக்க: கரூர் பிளானை கேன்சல் செய்யும் விஜய்? என்ன காரணம்? வெளியான தகவல்..
காணொளி காட்சி மூலம் குடும்பத்தினரை சந்தித்த விஜய்:
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் காணொளி காட்சி வாயிலாக விஜய் ஆறுதல் தெரிவித்தார். அதேபோல், கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத் தரப்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையையும் நேரில் சென்று வழங்கினர்.
இந்த சூழலில், “கரூருக்கு நிச்சயமாக வருவேன்; சந்திப்பு நடைபெறும்” என விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சியினர் தரப்பில் தகவல் வெளியானது.
அக். 27 அன்று கரூர் மக்களை சென்னையில் சந்திக்க திட்டம்:
இந்த சூழலில், மகாபலிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் திங்கட்கிழமை, அதாவது அக்டோபர் 27, 2025 அன்று குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட இருப்பதாக கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அக்டோபர் 27, 2025 அன்று இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.