Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமக கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு…மருத்துவர் ச. ராமதாஸ்!

Ramdoss Latest Pressmeet : சட்டமன்ற தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்து சில கட்சிகளும், சில கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அந்தக் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ச. ராமதாஸ் விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

பாமக கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு…மருத்துவர் ச. ராமதாஸ்!
பாமக கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 31 Jan 2026 14:02 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ் தரப்பு) சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அந்த கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்த மனுக்களை கட்சி தலைமை ஆராய்ந்து, அந்த நபர்களிடம் நேர்காணல் இன்று சனிக்கிழமை (ஜனவரி 31) தொடங்கியது. அதன்படி. விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தலைமை வகித்து கட்சியினரிடம் நேர்காணலை நடத்தி இருந்தார். இதில், 13 மாவட்டங்களை சேர்ந்த நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாக கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கட்சி அலுவலகத்தில் கட்சியினர் அதிகளவில் குவிந்திருந்தனர்.

3 நாள்கள் நடைபெறும் பாமக நேர்காணல்

இந்த நேர்காணலை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ச. ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று 13 மாவட்டங்களை சேர்ந்த நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வரும் நாட்களில் மற்ற எஞ்சி உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி தொடர்பாக தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி தொடர்பாக விரைவில் நல்ல முடிவை எடுத்து அதனை அறிவிப்போம்.

மேலும் படிக்க: “ரோடுஷோ வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை”.. வழக்கு தொடர்ந்த தவெக

கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி தொடர்பாக சில கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதே போல, பாட்டாளி மக்கள் கட்சியும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இரு பிரிவுகளாக உள்ளனர். இதனால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் இரு அணிகளில் பிரிந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலை நடத்தி முடித்திருந்தது.

தேர்தலை தனித்தனியாக சந்திக்கும் ராமதாஸ்- அன்புமணி

தற்போது, ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சியில் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இரு பிரிவினரும் சட்டமன்றத் தேர்தலை தனித்தனியே சந்திக்க உள்ளதாகவே தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும், ராமதாஸ் அன்புமணியை ஒன்று சேர வைக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் முயற்சி செய்தனர். ஆனால், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், பாட்டாளி மக்கள் கட்சி இரு பிரிவாகவே செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!