Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசல்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ.. ஏ1, ஏ2, ஏ3 லிஸ்டில் யார் பெயர்?

CBI FIR On Karur Stampede: சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், ஏ1 (A1) ஆக கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், ஏ2 (A2) ஆக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஏ3 (A3) ஆக இணைச் செயலாளர் நிர்மல் குமார் இணைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ.. ஏ1, ஏ2, ஏ3 லிஸ்டில் யார் பெயர்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Oct 2025 07:36 AM IST

அக்டோபர் 26, 2025: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை (FIR) தமிழக வெற்றி கழகம் பெற்றுக்கொண்டுள்ளது. சிபிஐ இந்த முதல் தகவல் அறிக்கையை 2025 அக்டோபர் 22 அன்று கரூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் அவர் இதுவரை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கடைசியாக 2025 செப்டம்பர் 27 அன்று விஜய் கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரில் நடந்தது என்ன?

இரவு 7 மணியளவில் கரூருக்கு விஜய் வருகை தந்தார். மக்கள் மத்தியில் உரையாற்றிய பின் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டுச் சென்ற சில நேரத்திலேயே அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, தமிழக அரசு தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதே சமயம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்:

ஆனால், தமிழக வெற்றி கழகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் “இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டது. அதே சமயம், தமிழக அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழுவையும் கலைக்க உத்தரவிட்டது.

மேலும் படிக்க: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்… எப்போ? எங்கிருந்து கிளம்புகிறது?

பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவினர், தங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் மாவட்டத்துக்கு சென்று பல்வேறு கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஐ – முதல் தகவல் அறிக்கை தாக்கல்:

இந்நிலையில், சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், ஏ1 (A1) ஆக கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், ஏ2 (A2) ஆக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஏ3 (A3) ஆக இணைச் செயலாளர் நிர்மல் குமார் இணைக்கப்பட்டுள்ளனர். அதோடு, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையை சிபிஐ, கரூர் நீதிமன்றத்தில் கடந்த 2025 அக்டோபர் 22 அன்று தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து, கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கேட்டு, தமிழக வெற்றி கழகம் தரப்பில் 2025 அக்டோபர் 25 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக வெற்றி கழகத்தினருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அதன் நகலை பெற்றுக்கொண்டார்.

இந்த முதல் தகவல் அறிக்கை தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என தெரிவித்தனர்.