பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை? புதிய கட்சி தொடங்குகிறாரா? அண்ணாமலை சொன்ன பதில்..
அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, அண்ணாமலையின் அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜூன் 1, 2026: “புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?” என்ற கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாட்களில் அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், தமிழகத்தில் அரசியல் பரபரப்பு என்பது சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. பல அதிரடி திருப்பங்கள் தினசரி நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், பாஜகவின் உட்கட்சி விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் இல்லையா ?
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்திருந்த போது மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தொடருமா மதிமுக? துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்.. துரை வைகோ சொன்ன டிவிஸ்ட்..
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், “களத்தில் நின்று பிரச்சாரம் செய்வேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், கோவை கிழக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததாகவும், அங்கு வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதால் அது ஒதுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து, பாஜகவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லையோ என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சூழலில், அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜக மேலிடத்தை சந்த்திக்கும் அண்ணாமலை:
இந்த சூழலில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புதிய கட்சி தொடங்குகிறாரா?
இந்த சந்திப்புக்கு பிறகு, அண்ணாமலையின் அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. புதிய கட்சி தொடங்கப் போகிறாரா? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது, “இன்னும் இரண்டு நாட்களில் எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். அதற்கான விளக்கத்தையும் நான் அளிப்பேன்” என குறிப்பிட்டுவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.