“சதுரங்க வேட்டை” பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.12 லட்சம் சுருட்டிய போலி சாமியார் உட்பட 9 பேர் கைது!
Gold Cheating Scam in Pollachi: பொள்ளாச்சி அருகே 'சதுரங்க வேட்டை' பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாகக் கூறி சென்னை வியாபாரியிடம் ரூ.12 லட்சத்தைப் பறித்துச் சென்ற போலி சாமியார் மற்றும் கேரள கும்பல் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை, அக்.13: திரைப்பட பாணியில் திட்டமிட்டு நடத்தப்படும் மோசடி சம்பவங்கள் பல உண்மையான வாழ்க்கையிலும் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை மிஞ்சும் வகையில் அரங்கேறிய ஒரு துணிகர மோசடிச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்குத் தங்கக் கட்டிகள் வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை பழைய இரும்பு வியாபாரியிடம் இருந்து ரூ.12 லட்சத்தைப் பறித்துச் சென்ற போலி சாமியார் மற்றும் கேரளாவைச் சேர்ந்த கடத்தல் கும்பல் உள்ளிட்ட 9 பேரைப் பொள்ளாச்சி தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து ரொக்கப் பணம் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!
மோசடியின் பின்னணியும் வியாபாரியிடம் கைவரிசையும்:
சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஜான் பாஷா என்பவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலி சாமியார் வேல்முருகன் (83) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்தி, சந்தை விலையை விடக் மிகக் குறைந்த விலைக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றுத் தர முடியும் என்றும், அதற்கு சில கேரள நபர்கள் உதவி செய்வார்கள் என்றும் ஜான் பாஷாவிடம் வேல்முருகன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாதிரிக்காகச் சில போலித் தங்கக் கட்டிகளையும் அவர் ஜான் பாஷாவுக்குக் காட்டியுள்ளார். இதனை முழுமையாக நம்பிய ஜான் பாஷா, தங்கக் கட்டிகளை வாங்குவதற்காக ரூ.12 லட்சம் ரொக்கப் பணத்துடன் கடந்த 9ஆம் தேதி பொள்ளாச்சிக்குப் பேருந்து மூலம் வந்துள்ளார். பொள்ளாச்சி மண்ணூர் பகுதியில் போலி சாமியாரைச் சந்தித்த அவர், அங்கு நின்றுகொண்டிருந்த கும்பலுடன் ஒரு காரில் ஏறியுள்ளார். அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு காரில் மற்றொரு கும்பலும் வந்துள்ளது. மண்ணூரில் இருந்து ராமபட்டினம் செல்லும் வழியில், காரில் இருந்த கும்பல் திடீரென ஜான் பாஷாவை மிரட்டி அவரிடமிருந்த ரூ.12 லட்சம் பணத்தைப் பறித்துக்கொண்டு, அவரையும் போலி சாமியார் வேல்முருகனையும் நடுவழியில் இறக்கிவிட்டுத் தப்பியோடியது. வாகனத்திலிருந்து இறங்கிய வேல்முருகனும் திடீரென மாயமானதை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை ஜான் பாஷா தாமதமாக உணர்ந்துள்ளார்.
போலீசாரின் தீவிர விசாரணை:
சம்பவத்தைத் தொடர்ந்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்திற்குச் சென்ற ஜான் பாஷா, தான் இரும்பு வியாபாரத்திற்காகப் பணம் கொண்டு சென்ற போது மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுப் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாக முதலில் பொய் புகார் அளித்துள்ளார். இருப்பினும், புகாரில் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது சொந்தப் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் குறைந்த விலைக்குத் தங்கம் வாங்குவதற்காக வியாபாரி சென்னை இருந்து வந்து பணத்தைப் பறிகொடுத்த உண்மையான நிலவரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைக் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் உட்பட 9 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் படிக்க: ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!
கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:
இச்சம்பவத்தில் தொடர்புடைய கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சந்தீப் (36), சிஜு (35), பினூ (43), சுதீஷ் (37), பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த கார்த்தி (40), திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (53), உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் (42), ரவிக்குமார் (54), மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலி சாமியார் வேல்முருகன் (83) ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் கடத்தல் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் ஆகியவற்றை போலீசார் வெற்றிகரமாகப் பறிமுதல் செய்துள்ளனர். பேராசையைக் காட்டி வியாபாரியிடம் பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்ட இச்சம்பவம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.