கணவன்-மனைவி இடையே தகராறு.. இன்ஸ்டாகிராமில் அந்தரங்க வீடியோ வெளியீடு.. காவல் நிலையத்தில் அரங்கேறிய அதிரடி மோதல்!!
Women's Police Station Chaos: கோவையில் மனைவியின் அந்தரங்க வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட விவகாரத்தில் விசாரணைக்கு வந்த கணவரை உறவினர்கள் தாக்க முயன்றதுடன், தடுக்கச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, அக்.12: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனிப்பட்ட அந்தரங்க வீடியோவைச் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவன் மீதான புகாரைத் தொடர்ந்து, காவல் நிலைய வளாகத்திலேயே நடைபெற்ற மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு வந்த வாலிபரை அவரது மனைவியின் உறவினர்கள் ஆவேசமாகத் தாக்க முயன்றதும், அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும் அவர்கள் தாக்குதல் தொடுத்ததும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் மற்றும் குடும்பப் பிரச்சினை:
கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட செலகரச்சல் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி மகள் சண்முகப்பிரியா (25) என்பவரும், மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களின் காதல் திருமணத்திற்கு ராம் பிரகாஷின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், தம்பதியர் இருவரும் மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாகக் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு காரணமாகக் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சண்முகப்பிரியாவை அவர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், மனமுடைந்த அவர் ராம் பிரகாசுடன் இனி சேர்ந்து வாழ்வதில்லை என்றும் தனது உறவை முறித்துக் கொள்வதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
