“இனி எங்கள் வழி தனி வழி”.. கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவுவதை நிறுத்துங்கள்.. மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!!
DMK Warns Manickam Tagore: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், திமுகவை விமர்சிக்க அவருக்குத் தகுதியில்லை என்றும், அவதூறுகளைத் தொடர்ந்தால் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் திமுக எச்சரித்துள்ளது.
சென்னை, அக்.13: தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையேயான மோடல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூரின் சமீபத்திய விமர்சனங்களுக்கு திமுக மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை மற்றும் டெல்லி போராட்டம் குறித்து திமுக மீது மாணிக்கம் தாகூர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தங்களை விமர்சிப்பதற்கு அவருக்கு எவ்விதத் தகுதியும் உரிமையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பாஜக எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்து, தவெக தலைவர் விஜய்யின் ஆதரவாளராகச் செயல்படும் மாணிக்கம் தாகூர் தனது எல்லை மீறிய பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி பூசல்.. எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி.. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 3-ஆவது நாளாக ஆலோசனை!
SIR நடவடிக்கை மற்றும் தேர்தல் முறைகேடு விவகாரம்:
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையின் போது மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக திமுகவினர் களத்தில் நின்று படிவங்களை நிரப்பி உதவியதாகக் குறிப்பிட்டுள்ள திமுக, இருப்பினும் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டது ஊரறிந்த உண்மை என்று சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான இந்த நடவடிக்கையை மூடிமறைத்து மாணிக்கம் தாகூர் வக்காலத்து வாங்குவதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய அளவிலேயே முதன்முதலாக அறிக்கை வெளியிட்டவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என்பதை நினைவூட்டியுள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நோட்டீஸிலும் திமுக எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பாஜக எதிர்ப்பில் திமுக என்றுமே பின்வாங்கியதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
துரோகமும் கூட்டணியில் இருந்து வெளியேற்றமும்:
கடந்த தேர்தலில் திமுகவின் வாக்குகள் சரிந்ததற்கு SIR நடவடிக்கை மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியில் இருந்த மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற சில புல்லுருவிகளின் செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என திமுக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே மாற்றுக்கட்சியின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்பட்டு, தினமும் திமுகவை விமர்சித்து கூட்டணியின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கியதாகத் தெரிவித்துள்ளது. பதவிப் பிச்சைக்காகக் கூட்டணி தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்ட இத்தகைய துரோகங்களால் தான் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதாகவும், இனி தங்கள் வழி தனி வழி என்றும் அறிவித்துள்ளது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்த பிறகு, நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவது போல மக்களிடையே திமுகவுக்கான ஆதரவு பன்மடங்கு பெருகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை
தவெக – காங்கிரஸ் குறித்து காட்டமான கேள்விகள்:
டெல்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், திமுக பாஜகவுக்கு அஞ்சுவதாக மாணிக்கம் தாகூர் கூறுவது நகைப்புக்குரியது என்று திமுக சாடியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தவெக தலைவர் விஜய், SIR விவகாரம் குறித்தோ, ஞானேஷ் குமார் குறித்தோ அல்லது பிரதமர் மோடி குறித்தோ இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாத தொடைநடுங்கியாக இருக்கிறார் என்று கடுமையாகச் சாடியுள்ள திமுக, அத்தகைய விஜய்யைக் கேள்வி கேட்கத் துணிவில்லாத மாணிக்கம் தாகூர், பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. திமுக குறித்துத் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பினால் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தனது பதிவில் எச்சரித்துள்ளது.