தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை
Tamil Nadu Power Cut Measures : தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்குக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 11: தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்குக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் மின்சாரத்துக்கான தேவை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தொழிற்சாலைகளின் கூடுதல் பயன்பாடு காரணமாக தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் நிலவும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது.
இதையும் படிக்க : திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!




4,500 மெகாவாட்டுக்கு டெண்டர்
இதன் ஒரு பகுதியாக, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் வாங்குவதற்கு கடந்த வாரம் மின்வாரியம் டெண்டர் கோரியது. அக்டோபர் 12 முதல் 31 வரை மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான அதிக மின்தேவை கருத்தில் கொண்டு இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.
டெண்டரில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை குறைந்தபட்சம் ரூ.31.99 முதல் அதிகபட்சம் ரூ.37 வரை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக விவரங்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் டெண்டரை இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த டெண்டருக்கு அக்டோபர் 12, 2026 இன்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் மின்சாரம் கிடைப்பதன் மூலம், வரும் நாள்களில் மின்வெட்டுப் பிரச்னை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெறுவதன் மூலம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி பூசல்.. எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி.. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 3-ஆவது நாளாக ஆலோசனை!
இதற்கிடையில் சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் காலை சில பகுதிகளில் மட்டும் அக்டோபர் 12, 2026 இன்று மின்விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின்சுவிட்சுகளில் ஒரு சுவிட்சின்பிஃபேஸ் மின்விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து, மின்விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர். இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.