மீண்டும் பதவி கொடுத்த இபிஎஸ்.. அதிருப்தியில் புலம்பும் சீனியர்கள்.. அதிமுகவுக்குள் வெடித்த சர்ச்சை!!
கட்சியைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவியே அதிகாரம் மிக்கதாகும். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பரிந்துரை, போராட்டங்களை முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அதிகாரங்கள் மாவட்ட செயலாளர்களுக்கே உள்ளன. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர் பதவிக்கு எந்தவித தனி அதிகாரமும் இல்லை என அவர்கள் கருதுகின்றனர்.
சென்னை, ஜுன் 27: அதிமுகவில் அண்மையில் பதவி பறிக்கப்பட்ட சீனியர் தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். இருப்பினும், அதிகாரம் இல்லாத பெயரளவு பதவிகளே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். சட்டமன்றத்தில் தனி கட்சி போல செயல்பட்டதுடன், தாவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதையும் படிக்க: தமிழ்நாடு பிரதிநிதியாக கர்நாடக தொழிலதிபர்.. முதல்வர் விஜய்யின் முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!
மீண்டும் இபிஎஸ் பக்கம் திரும்பிய சீனியர்கள்:
இதன் காரணமாக, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். அந்தப் பதவிகளில் தனது ஆதரவாளர்களை அவர் நியமித்திருந்தார். இதனிடையே, தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சீனியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்பினர். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பதவிகளை உடனடியாகத் திரும்ப வழங்காமல் தவிர்த்து வந்தார்.
புதிய பதவிகளும் நீடிக்கும் அதிருப்தியும்:
சுமார் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர்களுக்கு புதிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தங்கமணி, கருப்பண்ணன், கே.பி. அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த புதிய பதவிகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரம் இல்லாத பதவிகள்?
கட்சியைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவியே அதிகாரம் மிக்கதாகும். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பரிந்துரை, போராட்டங்களை முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அதிகாரங்கள் மாவட்ட செயலாளர்களுக்கே உள்ளன. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர் பதவிக்கு எந்தவித தனி அதிகாரமும் இல்லை என அவர்கள் கருதுகின்றனர். அதிமுகவில் ஏற்கனவே 60-க்கும் மேற்பட்டோர் அமைப்புச் செயலாளர்களாக உள்ளனர்.
பொதுவாக கட்சியில் புதிதாக இணைபவர்களின் கவன ஈர்ப்பிற்காக வழங்கப்படும் இந்தப் பதவி, பொதுக்குழு மற்றும் தலைமைக்கழக கூட்டங்களில் பங்கேற்க மட்டுமே உதவும். அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் பதவியும் பெயரளவில் பெரியதாக இருந்தாலும், நிர்வாகிகள் நீக்கம்-நியமனம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் பொதுச்செயலாளரிடமே உள்ளது.
இதையும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?
முன்னாள் அமைச்சர்களின் அடுத்தகட்டம்:
பதவி கிடைக்காத மற்றும் முக்கியத்துவம் குறைந்த பதவி பெற்றுள்ள முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படாவிட்டால், அந்தப் பதவிகள் பறிக்கப்பட்டு மீண்டும் முன்னாள் அமைச்சர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.