‘நியாயப்படுத்த முடியாது.. குதிரபேர அரசியல் செய்யும் தவெக’.. காங்கிரஸ் கட்சி ஜோதிமணி கண்டனம்
Jothimani MP Condemns TVK Horse Trading : தமிழகத்தில் குதிரை பேர அரசியலில் ஈடுபடும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலை நியாயப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி எம்.பி. யான ஜோதி மணி கண்டனம் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் நடத்தி தங்களது கட்சியில் இணைத்து வருவதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் எம். பி. ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. அதன் அடிப்படையில் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சி பங்கெடுத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை முதல் அமைச்சர் ஆக்கி உள்ளனர். அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் சிறப்பான ஆட்சியை தர வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன்படி, முதல்வர் விஜயும் அவர்களது கருத்தை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாக தெரிகிறது.
தவெக வழிமுறைகளை காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது
இதற்காக தமிழக மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தருவதற்காக ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாங்கள் அவருக்கு துணை நிற்போம். ஆனால், தமிழக வெற்றி கழகம் தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் அனைத்தும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். அதை விடுத்து விட்டு பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு இருக்கும் பட்சத்தில் அதனை தயக்கமின்றி வெளிப்படுத்துவதே தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானதாக இருக்கும்.
மேலும் படிக்க: கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..




குதிரை பேர அரசியலை நியாயப்படுத்துவது தவறாகும்
தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதனை அழகாக எடுத்துக் கூறுகிறது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது ஆகும். இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பாரதிய ஜனதா கட்சி முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம் தான். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்புக்கு எதிராக குதிரை பேரத்தை நடத்தியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அதை மீறி ஆட்சி அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் போனது.
கொண்ட கொள்கைக்கு செய்கிற வரலாற்று துரோகமாகும்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களில் எதிர்க்கும் என்ற இரட்டை நிலைபாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்படுமே ஆனால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்று துரோகம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..