அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே… 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Puducherry Budget Announcements: புதுச்சேரி மாநிலத்தில் 9- ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல் அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
புதுச்சேரி மாநிலத்தில் 2026- 2027- ஆம் நிதியாண்டுக்கான ரூ.14,300 கோடி வரியில்லா பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உறுதி செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 9- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க மடிக்கணினி ( டேப்லெட்) இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். 1- ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடி, மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் சுமார் 120 ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்படும்.
ஆதிதிராவிட மக்களுக்கு மின்சார ஆட்டோ- பைக்குகள்
மேலும் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு 250 மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். அத்துடன் அம்பது மின்சார ஆட்டோக்களும் வழங்கப்பட உள்ளது. கலை மற்றும் பண்பாட்டு துறைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!




அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு, துவரம் பருப்பு
புதுச்சேரி மாநில மக்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவை மாற்றி அமைத்து அரிசியுடன் கோதுமை மாவு, கேழ்வரகு, துவரம் பருப்பு, நெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தொகுப்பாக வழங்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சிறப்பு நிதி அமைப்புக்காக ரூ. 1,676.89 கோடி, பசுமை சிறப்பு நிதி ரூ. 245.31 கோடி சிறப்பு கூறு திட்ட நிதி ரூ. 642.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் சிறப்பு நிதி- உழவு நிதி அளிப்பு
காவிரி நீர் கிடைக்காமல் தவிக்கும் காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1,500 வீதம் உழவு நிதி வழங்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் நூலகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ. 7,0890 கோடி ஆகும், மத்திய அரசின் நிதியாக ரூ. 3,517 கோடி உள்ளது. மற்றவை நிகர கடன் வரம்பில் இருக்கிறது. இதில், பட்ஜெட் தொகையில் ரூ. 12 ஆயிரத்து 115 கோடி வருவாய் செலவினங்களுக்கும் ரூ. 2,015 கோடி மூலதன செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!