அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Minister Rajmohan Announcements : தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அவை என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 6 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 1,443 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1,328 பணியிடங்கள் என மொத்தம் 2,271 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக உடனடியாக நிரப்பப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் 358 பேருக்கு விரைவில் கருணை அடிப்படையில் ஆன பணிகள் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்துக்கு ஒரு நாள் பேக் மற்றும் புக் இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம். 6- ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
டி.என். அறிவு திட்டம் செயல்படுத்தப்படும்
2027- 2028 கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டி.என். அறிவு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த புதிய பாடத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை அறிவு பவுண்டேஷன் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை அறிவு டிஸ்கவரி, 9-ம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை அறிவு என்ற வளர்ச்சி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடக்க நிலையில் வலுவான அடித்தளத்தையும் நடுநிலை நிலையில் ஆழமான புரிதலையும் மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
சீருடையுடன் ஸ்போர்ட்ஸ் ஜெர்சி வழங்கப்படும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜெர்சி வழங்கப்படும். ஓடி விளையாடு திட்டத்தின் கீழ் இனி பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஓ.டி. விளையாட்டு பிடி பாடப்பிரிவு என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல ஒளிரும் புன்னகை என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
ரூ. 22.36 கோடியில் வெற்றி பாதை திட்டம்
தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு கருப்பொருளாக இருக்கும். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு முன்னனி நிறுவனங்களில் இடம் பெறுவதற்காக ரூ.22.36 கோடியில் வெற்றி பாதை திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளிதழ் மற்றும் நூல்களை வாசிப்பதற்காக ரூ.1.45 கோடியில் வாசிப்பை நேசிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதே போல, பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை… உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!