அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு பேசத்தொடங்கிய எஸ்.பி வேலுமணி.. முதல்வர் விஜய், அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து உரை..
S. P Velumani Speech In Assembly: திமுக ஆட்சியில் தாங்கள் வாய்ப்பு கேட்டபோது வழங்கப்படாது என்றும், ஆனால் தற்போதைய அரசு மிகவும் பெருந்தன்மையாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைக் கேட்ட முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
ஆகஸ்ட் 24, 2026: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார். தனது உரையை அண்ணன் எடப்பாடியார் எனக் குறிப்பிட்டு தொடங்கிய எஸ்.பி. வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு பேசினார்.
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து உரை:
தொடர்ந்து பேசிய அவர், அம்மா உணவகம் உள்ளிட்ட அம்மாவின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் அதிகாரப் பொறுப்புகளில் இருந்த பலரும் தற்போதும் தொடர்வதாகவும், அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..
திமுக ஆட்சியில் தாங்கள் வாய்ப்பு கேட்டபோது வழங்கப்படாது என்றும், ஆனால் தற்போதைய அரசு மிகவும் பெருந்தன்மையாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைக் கேட்ட முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
தேர்தலில் வெற்றி பெற உதவிய தலைவர்களுக்கு நன்றி:
தொடர்ந்து, தனது வெற்றிக்காகப் பணியாற்றிய கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை:
கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பல்வேறு முக்கியத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோவையில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், காட்டுப்பன்றிகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னையில் மாலை நேரங்களில் தொடரும் மழை..
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.