பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. மாணவியிடம் இப்படி பேசலாமா? பதிவாளர் எடுத்த கடும் நடவடிக்கை!
Annamalai University Professor Suspend : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசிய வேதியியல் துறை தலைவரை பணியிடை நீக்கம் செய்து பதிவாளர் உத்தரவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றனர். இதில், அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் இந்த பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் 3- ஆம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மாணவி துறை ரீதியான பணிக்காக வேதியியல் துறை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அந்த அலுவலகத்தில் வேதியியல் துறை தலைவரும், பேராசிரியருமான ராஜேந்திரன் பணியில் இருந்தார்.
மாணவியின் குடும்ப வாழ்க்கை குறித்து அவதூறு பேச்சு
அப்போது, அந்த மாணவியிடம், பேராசிரியர் ராஜேந்திரன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை கேட்ட அந்த மாணவி பேராசிரியரிடம் எதற்காக இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு, மீண்டும் அவதூறாகவும், அநாகரிகமாகவும் ராஜேந்திரன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்.
மேலும் படிக்க: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் சோகம்.. நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்.. ஒருவர் பலி, மற்றொருவர் நிலை என்ன?
பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு
அந்த புகாரின் பேரில், போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்கலைக்கழக மாணவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்ந்து, பேராசிரியர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
வேதியியல் பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும், பேராசிரியர் ராஜேந்திரன் விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டது. ராஜேந்திரனிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவியிடம், பேராசிரியர் அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், வேதியியல் துறை தலைவரும், பேராசிரியருமான ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் சினிமா பாணியில் சம்பவம்.. ரத்த களறியில் இளைஞர் மீட்பு.. கொலை வெறி கும்பலை கூண்டோடு தூக்கிய தனிப்படை!