சென்னையில் பள்ளி மாணவர் கொடூரக் கொலை.. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!!
Chennai School Student Murder: சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு தோற்றுவிட்டதாகச் சாடியுள்ள அவர், போதைப்பொருளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 15: சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசுப் பள்ளி மாணவர் தனுஷ் என்பவர் 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதன் காரணமாகவே அந்த மாணவர் படுகொலை செய்யப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய கொடூரச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: 80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை…
— Udhay (@Udhaystalin) August 15, 2026
இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் பயன்பாட்டையோ அல்லது அதன் விற்பனையையோ அம்பலப்படுத்தினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற நிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடுக்கப்படும் ஆபத்தான எச்சரிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத் திறனற்ற அரசைக்கண்டு சமூக விரோதிகளுக்கு எந்தவிதப் பயமும் இல்லாததே இத்தகைய கொடூரங்கள் துணிச்சலாக நடப்பதற்குக் காரணம் என்றும், குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதைக் கண்டும் காணாமல் அரசு மௌனம் காப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் சாடியுள்ளார்.
விசாரணைக்கு கோரிக்கை:
மாணவர் தனுஷ் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ள அவர், இத்தகைய தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது, அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன, இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பது குறித்து அரசு உரிய முறையில் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
மாணவர்களுக்கான கவுன்சிலிங்:
வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவர்கள் உணரும் வகையில், அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கிப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போதைப்பொருள் புழக்கத்தை தமிழகத்திலிருந்து வேரோடு அழிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.