AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் அரசு”.. தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!!

கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர், நிதி ஆய்வு கூட்டத்தில் தமிழகம் கடந்த சில ஆண்டுகளில் பெற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதனைகளை பெருமையாகப் பேசிவிட்டு வந்துள்ளார். அது ஒரு மாத கால ஆட்சியின் சாதனை அல்ல, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஆகும்.

“திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் அரசு”.. தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Jun 2026 13:20 PM IST

சென்னை, ஜுன் 18: தமிழக சட்டப்பேரவையில் புதிய அரசு அமைந்த பிறகு, இன்று முதன்முறையாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், புதிய அரசின் கொள்கை அறிக்கை மற்றும் ஆளுநர் உரை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொதுவாக ஆளுநர் உரை என்பது ஒரு மாநில அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது, அதற்கான நிதி ஒதுக்கீடு என்ன என்பது குறித்த ஒரு முன்கூட்டிய ‘ப்ளூ பிரிண்ட்’ மற்றும் பாலிசி நோட்டாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

ஆனால், இன்றைய ஆளுநர் உரையானது மக்கள் நலனுக்கானதாக இல்லை என்று சாடிய அவர், “இன்றைய ஆளுநர் உரை, ஆளும்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ போடுவதற்கான கண்டென்ட் மெட்டீரியலாக மட்டுமே அமைந்திருக்கிறது. முதலமைச்சர் தன்னைப்பற்றியும், தனது கட்சியைப் பற்றியும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சுயபுராண உரையாகவே இது உள்ளது” என்று விமர்சித்தார்.

ஆளுநர் – பாஜக – ஆளும்கட்சி ‘இணக்கம்’:

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை என்றும், அதில் பல்வேறு திருத்தங்களைச் செய்வார் என்றும் சுட்டிக்காட்டிய உதயநிதி, “இந்த முறை ஆளுநர், புதிய அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி, ஒரு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், ஆளும்கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலையும், ரகசிய ‘கனெக்ஷனும்’ ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது” என்றார்.

திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் அரசு:

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு தனது சொந்த சாதனைகளைச் சொல்ல முடியாமல் திமுக அரசின் திட்டங்களையே மீண்டும் வாசித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். உரையிலுள்ள முக்கிய அம்சங்களாக அவர் பட்டியலிட்டவை ஒலிம்பிக் மையங்கள் மற்றும் திறன் பயிற்சி மையங்கள், இட ஒதுக்கீடு மற்றும் இருமொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பு, வறுமையில்லா தமிழ்நாடு திட்டம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி மற்றும் உச்சநீதிமன்ற கிளை கோரிக்கை, கீழடி உள்ளிட்ட வரலாற்று அகழாய்வுகள் “இவை அனைத்தும் கடந்த திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தான். இவற்றுக்கு மேல் புதிய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு, தங்களின் சில நாட்கால ஆட்சித் தோல்விக்கான பழியை மட்டும் திமுக அரசின் மீது போடுகிறார்கள்” என்று சாடினார்.

முரண்பாடுகளின் உருவம்:

கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர், நிதி ஆய்வு கூட்டத்தில் தமிழகம் கடந்த சில ஆண்டுகளில் பெற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதனைகளை பெருமையாகப் பேசிவிட்டு வந்துள்ளார். அது ஒரு மாத கால ஆட்சியின் சாதனை அல்ல, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஆகும். ஆனால், இன்று ஆளுநர் உரையில் கடந்த கால நிர்வாகம் சரியில்லை என சில இடங்களில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும், மொத்த முரண்பாடுகளின் உருவமாக இந்த அரசு திகழ்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க வெள்ளை அறிக்கை:

புதிய அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை எந்தெந்த காலகட்டத்திற்குள் நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவான கால அட்டவணை ஆளுநர் உரையில் இருக்கும் என்று மக்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காகவே, சில நாட்களுக்கு முன்பு ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டது. அதனை நேற்று முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் புள்ளிவிவரங்களோடு முழுமையாக மறுத்து சரியான பதிலடி கொடுத்தார். அதற்கு புதிய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இதையும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மாற்றம்.. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய சாதனை!

தற்போதைய சூழலில் மின்வெட்டுப் பிரச்சினை, விவசாயிகள் போராட்டம் மற்றும் மோசமடைந்து வரும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு முற்றிலும் ஒரு “காப்பி-பேஸ்ட்” மற்றும் “ஸ்டிக்கர்” அரசாகவே செயல்பட்டு வருகிறது என்று சாடினார்.

Follow Us