எமனாக மாறிய அரசு பேருந்து.. 2 வயது குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து.. கதறும் குடும்பம்!
Dharmapuri Accident Girl Died : தர்மபுரி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சாமியார் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காவியா. இவர்களுக்கு 2 வயதில் வினோதினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், வினோதினி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து பெல்ரம்பட்டிக்கு 19- ஆம் என் கொண்ட டவுன் பேருந்து சென்றது. இந்த பேருந்தானது அந்த பகுதியில் சென்ற போது திடீரென பழுதானது. இதன் காரணமாக பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து 4- ஆம் என் கொண்ட மாற்று பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தானது சாமியார் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வினோதினி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க: சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..
2 வயது குழந்தை உடல் நசுங்கி பலி
இந்த விபத்தை பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனே, பேருந்தை நிறுத்துமாறு சத்தமிட்டனர். உடனே, அசம்பாவிதத்தை உணர்ந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இந்த விபத்தில் குழந்தை வினோதினி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டின் வெளியே வந்து குழந்தையின் சடலத்தை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.




கொடூர விபத்தால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
மேலும், கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தால் அருகில் இருந்தவர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர், இந்த விபத்து சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையின் தந்தை குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் கனமழை!