கச்சத்தீவு அருகே பரபரப்பு.. தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது.. விசைப்படகும் பறிமுதல்!!
ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 8 தமிழக மீனவர்களைப் படகு பழுதடைந்த நிலையில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. விசைப்படகையும் பறிமுதல் செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமேஸ்வரம், ஆகஸ்ட் 06: தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிக்க : ரூ.1.3 கோடி லஞ்ச பணம் பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 24 அரசு ஊழியர்கள் கைது.. டிவிஏசி அதிரடி நடவடிக்கை!
கடலுக்குச் சென்ற விசைப்படகுகள்:
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் மீன்பிடிப்பதற்கான அரசு அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் பாரம்பரிய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சூழலில், கச்சத்தீவு அருகே ஒரு விசைப்படகில் இருந்த மீனவர்கள் மீன்பிடிச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
எல்லை தாண்டியதாக நடவடிக்கை:
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் அதிவேக ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகைச் சூழ்ந்து மறித்தனர். அதன்பின், படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, நடுவழியில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் அடைக்க நடவடிக்கை:
நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திய போது, “தங்களது விசைப்படகின் இயந்திரம் மற்றும் பாகங்கள் சேதமடைந்ததன் காரணமாகவே ஓட்டமிழந்து எல்லை தாண்டி வர நேரிட்டது” என்று பிடிபட்ட தமிழக மீனவர்கள் தரப்பில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், மீனவர்களின் நியாயமான இந்த விளக்கத்தைக் காதில் வாங்காத இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கமான குற்றச்சாட்டையே முன்வைத்தனர்.
தொடர்ந்து, 8 மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று முறையான விசாரணை நடத்திய பின்னர், அவர்களைப் மன்னார் அல்லது யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்கதையாகும் அத்துமீறல்:
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடிச் சாதனங்களைச் சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் தூதரக ரீதியாகப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதி மீனவ அமைப்பினரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.