முதல்வர் விஜய் முதல் அமைச்சர்கள், MLAக்கள் வரை.. தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 வழக்குகள் தாக்கல்..
கடந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2011 - 12 வழக்குகளும், 2016 - 23 வழக்குகளும், 2021 - 13 வழக்குகளும், 2026 - 55 வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜுன் 27: நடந்து முடிந்த தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக மட்டும் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
இதையும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?
முதல்வர் விஜய் மீது 4 வழக்குகள்:
அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான காலக்கெடு ஜூன் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கெடுவுக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தமிழக முதல்வர் விஜய்-க்கு எதிராக மட்டும் மொத்தம் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் 3 வழக்குகளும், திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு வழக்கும் என மொத்தம் 4 தேர்தல் வழக்குகள் அவருக்கு எதிராகப் பதிவாகியுள்ளன.
அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் மீதும் வழக்கு:
முதல்வர் தவிர, தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் மரியவில்சன் ஆகியோரின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களான அன்பில் மகேஷ், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போன்ற முக்கியப் புள்ளிகள், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ-க்களின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். மேலும், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்க்கு எதிராகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை விட வரலாறு காணாத உயர்வு:
கடந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2011 – 12 வழக்குகளும், 2016 – 23 வழக்குகளும், 2021 – 13 வழக்குகளும், 2026 – 55 வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 55 வழக்குகளும் தற்போது முறைப்படி எண்ணிடப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளை எந்தெந்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விரைவில் முடிவு செய்து அறிவிப்பார். அதன் பின்னர், இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றப் பட்டியலில் இடம்பெற்று அதிகாரப்பூர்வ விசாரணைக்கு வரும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.