நெல்லை காரில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் – பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Nellai Death Mystery : திருநெல்வேலி அருகே எரிந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இறந்தவர்களின் பிரதே பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகயுள்ளது.
திருநெல்வேலி அருகே காரில் எரிந்த நிலையில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் இறப்பதற்கு முன் விஷம் அருந்தியிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மார்ச் 17, 2026 அன்று இருந்து பள்ளிவாசலை நோக்கி செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 4 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபீக், அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா, அவர்களது 15 வயது மகள் மற்றும் 12 வயது மகன் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், முகமது ரபீக் சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் இருந்த தனது வீட்டை விற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் கடுமையான கடன் பிரச்னையில் சிக்கி இருந்ததாகவும்,அவருக்கு கடன் வழங்கியவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து அழுத்தம் கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் ரூ. 42.65 கோடி பறிமுதல்..




இதன் காரணமாக, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள மனைவியின் ஊருக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த மார்ச் 16, 2026 அன்று நள்ளிரவில், அவர்களது கார் ஆத்தங்கரை பேருந்து நிலையம் மற்றும் சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் வழியாக சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ரம்ஜான் மாதம் என்பதால், முகமது ரஃபீக் குடும்பத்தினர் ஆத்தங்கரை பள்ளிவாசலில் சென்று தொழுகை செய்திருக்கின்றனர். பின்னர் தங்களது பழைய உடைகள் உள்ளிட்ட பொருட்களை அங்கு தானமாக வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆரம்ப கட்ட விசாரணையில் இது தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், முகமது ரபீக் மற்றும் அவரது மகனின் உடல்கள் முழுமையாக எரிந்திருந்ததால் கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், அவரது மனைவி மற்றும் மகளின் உடல்களில் விஷம் அருந்திய தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு, 4 பேரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?
முன்னதாகவே குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், தற்போது கிடைத்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கை அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதனால், 4 பேரும் முதலில் விஷம் அருந்தி பின்னர் காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.