AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக இடைத்தேர்தல் வரலாறு.. 58% வெற்றியைக் கைப்பற்றிய ஆளுங்கட்சிகள்.. உடைக்கப்படுமா பழைய பிம்பம்?

25 Years of Tamil Nadu Bypoll History: தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 58% வெற்றியை ஆளுங்கட்சிகளே பெற்றுள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள சூழலில், 1999 முதல் ஆர்.கே. நகர், ஈரோடு கிழக்கு வரையிலான இடைத்தேர்தல் வரலாற்றையும் அதிகாரப் பலம் மற்றும் தேர்தல் திருப்பங்கள் குறித்த முழுமையான செய்திப் பார்வையும் இதோ.

தமிழக இடைத்தேர்தல் வரலாறு.. 58% வெற்றியைக் கைப்பற்றிய ஆளுங்கட்சிகள்.. உடைக்கப்படுமா பழைய பிம்பம்?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Oct 2026 07:23 AM IST

அக்டோபர், 09: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், தமிழக இடைத்தேர்தல் களம் எப்போதுமே மக்கள் அளிக்கும் தீர்ப்பையும் தாண்டி ஆளுங்கட்சியின் அதிகாரப் பலத்தைக் காட்டும் களமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றிகளை அப்போதைய ஆளுங்கட்சிகளே தக்கவைத்துள்ளன. “இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை மக்கள் எடைபோடும் தேர்தல்” என்ற பழைய கூற்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1999 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடந்த 34 இடைத்தேர்தல்களில், 32 தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுத் தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் நிருபித்துள்ளது.

இதையும் படிக்க: Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. வாகை சூடப்போவது யார்?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் திருப்பங்களும்:

கடந்த கால் நூற்றாண்டில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்ற அரிதான நிகழ்வுகளாக 1999-ல் நடந்த நத்தம் தொகுதி இடைத்தேர்தலும், 2004-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட மங்களூர் பேரவை தொகுதி இடைத்தேர்தலும் மட்டுமே அமைந்தன. இதனிடையே, தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி மிகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. 2015-ல் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகத் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்த நிலையில், திமுக இத்தேர்தலைப் புறக்கணித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயலலிதா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 2016 பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதாவே மீண்டும் வென்ற சூழலில், அவரது மறைவுக்குப் பிறகு 2017-ல் தொகுதி மீண்டும் இடைத்தேர்தலைச் சந்தித்தது.

சோதனைகள், பணப்பட்டுவாடா புகார்கள்:

2017 ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 89 கோடி ரூபாய்க்கான கணக்கு ஆவணங்கள் சிக்கியதால், ஏப்ரல் 10-ஆம் தேதி தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகக் களம் கண்ட டிடிவி தினகரன், ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விடக் கூடுதல் வாக்குகள் பெற்று அதிரடி வெற்றி பெற்றார். இத்தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை பாஜக பெற்ற சம்பவமும் அரங்கேறியது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் தொடர் தேர்தல்கள்:

2017-ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதனுடன் கலைஞர் கருணாநிதி மறைவு, ஏ.கே.போஸ், கனகராஜ் ஆகியோரின் மறைவு மற்றும் தண்டனை காரணமாகத் தகுதி இழந்த ஹோசூர் தொகுதி உட்பட மேலும் 4 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 22 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 13 இடங்களிலும், ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதேபோல, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான திருமகன் ஈவேரா மற்றும் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் அடுத்தடுத்த மறைவுகளால் 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

இதையும் படிக்க: சுங்கத்துறையிடம் சிக்கிய லேண்ட் க்ருசர்.. ஆதவ் அர்ஜூனா நிறுவனத்திடம் ரூ.2.60 கோடி மோசடி.. சிக்கிய கர்நாடக இடைத்தரகர்!

இடைத்தேர்தல்களின் தற்போதைய எதிர்பார்ப்பு:

சமீபத்தில் நடைபெற்ற விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவாவும், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கற்பகமும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வரிசையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து காலியான இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் தவெக சார்பில் மீண்டும் அதே முன்னாள் எம்.எல்.ஏ-க்களே போட்டியிடுவதால், வழக்கமான ஆளுங்கட்சி ஆதிக்கப் பாணியை மீறி இம்முறை தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

Follow Us